"10 பேருக்கு ஆயுள் தண்டனை".. ஆடிப்போன உறவுகள்.. நீதிமன்றத்தில் கதறி அழுததால் பரபரப்பு
கடலூர்: மீனவர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கேட்டு ஆடிப்போன உறவினர்கள், தண்டனைக்குள்ளான தங்கள் உறவினர்களை ஒரே நேரத்தில் பார்க்க முயன்றனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் கடலூரில் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது மீனவர்கள் கத்தி, அரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய கடுமையான தாக்குதலில் அதிமுக பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.
கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடையும் முன்பே ஒருவர் இறந்து விட்டார்.

இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசை மணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துகுமார் ஆகிய 10 பேருக்கும் நீதிபதி பிரகாஷ் ஆயுள் தண்டனை அறிவித்தார். இந்த தீர்ப்பை கேட்டதுமே உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்நிலையில் தண்டனை அறிவித்த பின்னர், சிறைக்குள் அடைக்கப்பட இருந்தவர்களை பார்க்க உறவினர்கள் முயன்றனர். அப்போது மொத்தமாக உறவினர்கள் திரண்டதால் நீதிமன்றத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை போலீசார் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications