சர்ச்சை பேச்சு! பொன்முடி உருவப் படத்தை துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டம்.. அதிமுகவினர் ஆவேசம்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைச்சர் பொன்முடியின் பெண்கள் குறித்த இழிவான பேச்சை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் உருவப்படத்தை கையில் ஏந்தி துடைப்பத்தால் அடித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்முடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அவர் பதவியில் இருந்து விலகக் கோரியும், அவரது உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடைப்பத்தால் அடித்து பெண்கள்
இதேபோன்று கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்திலும் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக மேற்கு மாவட்ட சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருள்மொழி தேவன் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, பொன்முடியின் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி பெண்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவரது உருவப்படத்தை கையில் வைத்து துடைப்பத்தால் அடித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அருள்மொழி தேவன் கூறுகையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
போலீசாருடன் வாக்குவாதம்
இதனை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. வனத்துறை அமைச்சர் பொன்முடி நாகரீகம் இல்லாமல் பெண்கள் பற்றி இழிவாக ஆபாசமாக பேசுகிறார். அவரை நிரந்தரமாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்துவதாக கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் பால கொல்லை ரவிச்சந்திரன், நகர செயலாளர் சந்திரகுமார், நகர துணை செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் ஆபாசமான கருத்துகளை பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பேசிய காணொலி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பொன்முடியின் கட்சி பதவியையும் பறித்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பொன்முடியின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், "தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
மனப்பூர்வமாக வருந்தினேன்
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications