விஏஓ சாவித்திரி கடலூரில் விழுந்தடித்து ஓடிவந்து.. சேத்தியாத்தோப்பு மண்ணில் ஆச்சரியம் பாருங்க! பரவசம்
கடலூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்பகுதிகளில் சமீபகாலமாகவே சிலைகள் கிடைத்து வருவது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.. இந்த சிலைகள் அனைத்துமே, மீட்கப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டு, அது தொடர்பான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், கடலூர் மாவட்டத்திலும் கடவுள் சிலைகள் கிடைத்து வருவது, அம்மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. நேற்று நடந்த சம்பவம் என்ன தெரியுமா?
கடந்தமாதம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, ஐம்பொன் சிலை ஒன்று நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் முகமது அப்சர்.. இவருக்கு 35 வயதாகிறது.. கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் புதிய வீடு கட்டுவதற்காக, சம்பவத்தன்று அஸ்திவாரம் தோண்டியிருக்கிறார்...
கட்டுமான தொழிலாளர்கள் அஸ்திவாரம் தோண்டியபோது, பூமிக்கடியில் 3 அடி ஆழத்தில், பழங்கால சிலைகள் கிடைத்துள்ளன.. அதில், 3 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கண்டு அங்கிந்தவர்கள் ஆச்சரியத்தில் நின்றனர்.. அதேபோல, சிதைந்த நிலையில் திருவாச்சி, அஸ்தி தேவர், ஒரு அடி உயரமுள்ள பிரதோஷ நந்தி வாகனம் கண்டெடுக்கப்பட்டன.

தாசில்தார் தந்த உத்தரவு
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பிரகாஷ் மற்றும் காட்டுமன்னார்கோவில் போலீசார், சிலைகளை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.. கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல, ஏதேனும் சிலைகள் உள்ளதா என்று ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அதிகாரிகள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இதே கடலூரில், இதே காட்டுமன்னார்கோவிலில், இதே போன்ற ஐம்பொன் சிலை மீண்டும் கிடைத்துள்ளது.. சேத்தியாத்தோப்பு அடுத்த தோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.. இவருக்கு 40 வயதாகிறது.. விவசாய தொழிலில் பாலகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்..
விஏஓ சாவித்திரி அதிரடி
இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு வரப்பு வெட்டும் பணியில் பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.. அப்போது மண்ணில் 2 அடி உயர ஐம்பொன்னாலான அம்மன் சிலை புதைந்த நிலையில் இருந்துள்ளது.. இதைப்பார்த்து வியப்படைந்த பாலகிருஷ்ணன், உடனடியாக தாசில்தார் இளஞ்சூரியனுக்கு தகவல் தந்தார்.. உடனே தாசில்தார் உத்தரவின்படி, விஏஓ சாவித்ரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்..
அம்மன் சிலையை கைப்பற்றிய விஏஓ சாவித்திரி, அதனை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுகளை துவங்கியிருக்கிறார்கள்..
இதே காட்டுமன்னார்கோவில் பகுதியில் இப்படி ஐம்பொன் சிலைகள் கிடைப்பது இது புதிதல்ல.. இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, திருநாரையூர் என்ற கிராமத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், அந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை தந்துவிட்டன.
கடப்பாறையால் அஸ்திவாரம்
அதாவது, அங்கு வசித்து வரும் உத்திராபதி என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளார்.. தொழிலாளர்கள் கடப்பாறையால் பள்ளம் தோண்டும்போது டங் என்ற சத்தம் கேட்டுள்ளது.
உடனே வள்ளல் என்பவர் இது குறித்து உத்திராபதியிடம் சொல்லியிருக்கிறார்.. அதற்கு உத்திராபதி, அப்படியே இருக்கட்டும், தொடர்ந்து பள்ளம் தோண்ட வேண்டாம் என்று சொல்லி, தொழிலாளர்களை மாற்று வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்..ஆனால், மறுநாள் காலை பணிக்கு வந்த வள்ளல் என்பவர், அந்த இடம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்து உடனே விஏஓவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தோண்ட தோண்ட சிலைகள்
தவலறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், உத்திராபதி வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போது பழங்கால வெங்கல சாமி சிலைகள் 6 இருந்தன.
இதையடுத்து, கடலூர் எஸ்பி உத்தரவின்பேரில், உத்தராபதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது..அப்போதுதான், தொழிலாளர்கள் அஸ்திவாரம் தோண்டுவதற்கு வருவதற்கு முன்பேயே, அதிகாலையில் எழுந்து பள்ளம் தோண்டி அதிலிருந்த 6 சாமி சிலைகளை எடுத்து உத்திராபதி மறைத்து வைத்தது தெரியவந்தது. பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அதே இடத்தில் மீண்டும் பொக்லைன் மூலம் தோண்டினார்கள்.. அப்போது மேலும் 3 சிலைகள் கிடைத்தன.
வியப்பில் நின்ற மக்கள்
அனைத்துமே பழமையான சிலைகள் என்பதால், தொல்லியல் துறை அதிகாரிகளும் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆனால், சிவன் பார்வதி, இடம்புரி விநாயகர் ,நடராஜர் ஆடிப்பூர அம்மாள் , சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன் ,திரிபூரநாதர் (சிவன் ). சண்டீஸ்வரர், திருஞானசம்பந்தர் ஆகிய சாமி சிலைகள் ஒரே இடத்தில் கண்டதுமே, அந்த கிராம மக்கள் மெய்சிலிர்த்து நின்றதை மறக்க முடியாது.
அந்தவகையில், இப்போதும் ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது.. தொடர்ந்து சேத்தியாத்தோப்பு பகுதியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை சிலிர்ப்படைய வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications