துணி காய போடும்போது விபரீதம்.. மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி.. கடலூரில் சோகம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காய போடும்போது மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராமர் - பெரியம்மா தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் பெரியம்மா தனது வீட்டின் கொடி கம்பத்தில் துணி காய போட்டிருக்கிறார்.

அப்போது அந்த கொடி கம்பத்தின் மீது மின்சார வயர் உரசி இருக்கிறது. இதனால் துணி காய போட்டபோது ஏற்பட்ட அதிர்வில், பெரியம்மா சத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் தாயை காப்பாற்ற மணிகண்டன் முயற்சித்தபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த நேரத்தில் பெரியம்மாளின் கணவர் ராமரும் அருகில் இருந்துள்ளார். இதனால் அவர் மீது மின்சார கம்பி விழுந்தது.
இதனைத்தொடர்ந்து மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராமர், மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்தனர். பெரியம்மா மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தந்தை, மகன் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தந்தை, மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்தது சுற்று வட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அப்போது மின் கம்பிகளால் பாதிப்பு இருக்கிறதா, குடியிருப்பு பகுதிகளில் மின் கம்பிகளில் பாதிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மின்சார கம்பிகள் செல்லும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications