1 மாத குழந்தை.. வீடு புகுந்து கடித்துக் குதறி கொன்ற தெருநாய்.. அலறிய தாய்.. அதிர்ந்த கடலூர்!
கடலூர்: கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துக் குதறி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதியர் சக்திவேல் - நந்தினி. சக்திவேல் தற்போது மாலத்தீவில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 1 மாத கைக்குழந்தை உள்ளது.

குழந்தையின் தாய் நந்தினி, வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்த தெரு நாய் ஒன்று குழந்தையை கடித்து குதறியுள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1 மாத குழந்தையை தெரு நாய் கடித்துக் குதறி உள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது, தெரு நாய் குழந்தையை குதறியது தெரியவந்தது.
இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து திட்டக்குடி போலீசார் அங்கு சென்றனர். நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் சென்னையில் வளர்ப்பு நாய், சிறுவன் மற்றும் சிறுமியை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.
இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications