கொரோனாவில் இருந்து மீண்ட 1 கோடியே 23 லட்சம் பேர் - உலக மக்களுக்கு தரும் நம்பிக்கை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்தை கடந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் 1 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவிற்கு 7.16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் 2 கோடி பேரை தொட்டுள்ளது. உலகத்தின் இயல்பான போக்கையே புரட்டி போட்டுள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முடங்கி போய்விட்டனர். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகலாம் என எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் தினசரியும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 395 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 லட்சத்து 75 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 187 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்கியதில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 516 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் 30 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 லட்சம் பேர் மீண்டிருக்கின்றனர். இந்தியாவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமலேயே பலரும் மீண்டு வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications