குஜராத்தில் உச்சம்.. இந்தியாவில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்.. தமிழகத்தில் 236 பேர் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் தற்போது வரை 11,717 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் அதிகபட்சமாக 2859 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 4,157 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2ஆம் அலையில் கொரோனா தவிர்த்து, கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

கருப்பு பூஞ்சை
Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பைக் கொண்டவர்கள் மத்தியில் இந்த பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கருப்பு பூஞ்சை பாதிப்பு அவர்களுக்கு எளிதாக ஏற்படுகிறது.

11,717 பேருக்குப் பாதிப்பு
இதனால் கருப்பு பூஞ்சை நோயை அனைத்து மாநில அரசுகளுக்கும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது வரை 11,717 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகக் குஜராத் மாநிலத்தில் 2859 கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 236 பேர்
அதேபோல மகாராஷ்டிாவில் 2770 பேருக்கும், ஆந்திராவில் 768 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 236 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 620 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு 120 பேருக்கு மட்டுமே தலைநகரில் கருப்பு பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் என்ன
மோசமான சுகாதார சூழ்நிலையே இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. கண்கள் அல்லது மூக்கைச் சுற்றி வலி, கண் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த வாந்தி ஆகியவை கருப்பு பூஞ்சை பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.

மருந்து என்ன
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு Amphotericin- B drug என்ற மருந்து அளிக்கப்படுகிறது. இந்த மருந்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு ஏற்ப Amphotericin- B மருந்தை அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications