மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை.. பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்பட 2 வழக்கு
டெல்லி: தொடர் போராட்டம், நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான புகார் தொடர்பாக ஒரு போக்சோ வழக்கு உள்பட மொத்தம் 2 வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனம் மீது சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தேசிய முகாமில் பல பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும் பாலியல் சீண்டலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்தது. குறிப்பாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது தான் மல்யுத்த வீராங்கணைகள் புகார்கள் தெரிவித்தனர்.
பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பாஜக எம்பியாக உள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க துவங்கின. இதையடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டது. அதோடு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியும் அமைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த கமிட்டி விசாரணை நடத்தியதோடு, விசாரணை அறிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் போராட்டம் தொடங்கியது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23ம் தேதி முதல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.
இதற்கிடையே தான் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கடந்த 24-ம் தேதி வீராங்கணைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கணைகள் கொடுத்த புகாரின் பேரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை துணை போலீஸ் கமிஷனர் பிரணவ் தயால் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி பிரணவ் தயால் கூறுகையில், ‛‛இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் எதிராக வந்த புகாரின் பேரில் கன்னாட்பிளேஸ் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று போக்சோ வழக்காகும். மற்றொன்று என்பது விரிவான விசாரணைக்கு ஏற்ற வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications