திரும்ப வராத 7,000 கோடி! பழைய 2,000 ரூபாய் நோட்டுகள் எங்கே? திணறும் ரிசர்வ் வங்கி
டெல்லி: ரிசர்வ் பேங்க் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் சுமார் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் இன்னும் திரும்பவரவில்லை என்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார். அதனால் நாட்டில் மிகப்பெரிய அளவுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

இந்திய நாணய வரலாற்றில் இந்த அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளையும் புகார்களையும் முன்வைத்தனர். நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார். அதன்பின்னர் பணம் புழங்குவதில் ஒரு தடுமாற்றம் நிலவியது. பலர் சரியான சில்லறை கிடைக்காமல் திண்டாடினர்.
மேலும் புதிய நோட்டுகள் அச்சடிப்பதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியானதால் மக்கள் அதிக துயரத்தில் சிக்கிக் கொண்டனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறப்பட்டவுடன் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கடந்த நவம்பர் 2016 இல், 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது. இந்தப் புதிய நோட்டுக்கள் மக்கள் கையில் சரளமாகக் கிடைப்பதற்கு முன்பே கர்நாடகாவில் ஒரு அரசியல்வாதியின் வீட்டில் கட்டுக் கட்டாக இருந்தது குறித்த வீடியோ பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதியதாக மத்திய அரசு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றிப் பல ஊகங்கள் பரவின. அதில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகச் சிலர் பேசிவந்தனர். இதனிடையே மீண்டும் கடந்த 2023 ஆண்டு மே மாதம் புழக்கத்திலிருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தியது. ஆகவே பலரும் தங்களிடம் இருந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற தொடங்கினர். அதன்படி திரும்பப் பெறப்படாத 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2023 மே 19 வரை மொத்த மதிப்பில் 1.96% இருந்தது. இதன் மதிப்பு ₹3.56 லட்சம் கோடி ஆகும்.
அதாவது 98.04% கரன்சி நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவிட்டதாகத் தகவல் அப்போது வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக 2024 அக்டோபர் 01 இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சுமார் 7117 கோடி ரூபாய் புழக்கத்திலிருந்தன. ஒரு மாதத்தில், அது ₹6,977.6 கோடியாகக் குறைந்துள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் நிறுத்தப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை வருடம் கடந்த பிறகும், ரூ.7,000 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக் கணக்குக்குத் திரும்ப வரவில்லை என்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதுவரை திரும்பப் பெறப்படாத ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 2024 அக்டோபர் 31 நிலவரப்படி ₹6,977.6 கோடியாக இருக்கிறது என்கிறது ஆர்பிஐ தரவு.
இந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% கடந்த மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் சுமார் 5 ஆண்டுகள்தான். 2018-19க்கு பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்திவிட்டது. அதற்கு முன்னதாக மார்ச் 31, 2018 இன் நிலவரப் படி (37.3% புழக்கத்திலிருந்தபோது) ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. மார்ச் 31, 2023இல் 10.8% நோட்டுகள் மட்டும்தான் புழக்கத்திலிருந்தன.
ரூ.2000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
1. டெல்லியில் இருக்கும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மட்டுமே இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். அதற்குக் கையில் உள்ள பணத்துடன் ஆதார் அட்டை மற்றும் அதன் நகலை உடன் எடுத்துச் செல்லவும். தொகை ரூ. 50,000க்கு மேல் இருந்தால், நீங்கள் பான் கார்டு எண்ணையும் அதற்கான அசல் ஆவணத்தையும் உடன் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
2. ஆவணங்கள் அனைத்தையும் நுழைவு வாயிலில் காட்டவேண்டும் அங்கு இதற்காக உரிய ஒரு படிவம் வழங்கப்படும். அதைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
3. கையில் பை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். வாயிலில் பை அல்லது மடிக்கணினியை ஒப்படைத்துவிட்டு உள்ளே அனுமதிக்கப்படுவர்.
4. நீங்கள் பூர்த்த படிவத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரியிடமிருந்து முத்திரையைப் பெற வேண்டும்.
5. முத்திரையிடப்பட்ட படிவத்துடன் நீங்கள் ஆர்.பி.ஐ வங்கியின் பிரதான அலுவலகத்திற்குள் நுழையலாம். அங்கு முறையான விபரங்கள் தரப்படும்.
6. இதற்காக உள்ள ஒரு கவுண்டரில் உங்கள் படிவம், ஆதார் நகல், ரூபாய் நோட்டுகளை ஒப்படைக்க வேண்டும். அதற்கான உரிய தொகை உங்களுக்கு உடனடியாக மாற்றி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications