சென்னைக்கு வந்த விமானம்.. நடுவானில் திடீரென எழுந்த சத்தம்.. பரபரத்த பயணிகள்.. நடந்தது என்ன?
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு 147 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானத்தில் எமெர்ஜென்சி ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் திடீரென எமெர்ஜென்சி சத்தம் எழுந்தது. இதனால் விமான பயணிகள் மற்றும் சிப்பந்திகள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று வந்து கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 147 பயணிகள் இருந்தனர். இதில் கவுகாத்தியை சேர்ந்த ஹேம் நாத்(வயது 61) என்பவர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் வந்தார்.

திடீரென விமானத்தில் ஒலித்த சைரன் ஒலி
அதில் ஹேம்நாத்தின் 8 வயது பேத்தி பிரசித்தாவும் அடங்குவார். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானி கேபினில் எமெர்ஜென்சி அலாரம் ஒலித்தது. விமானத்திற்குள்ளும் அந்த அவசரகால நேரத்தில் எழுப்பப்படும் சைரன் ஒலி கேட்டது. இதனால், விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானபணிப் பெண்களும் விமானத்திற்குள் பதற்றத்துடன் வந்து அனைத்து பயணிகளையும் கண்காணித்தனர்.

பயந்து போய் அழத்தொடங்கிய சிறுமி
அப்போது ஹேம்நாத்தின் பேத்தி , தனது இருக்கைக்கு கீழே இருந்த லைப் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் இது குறித்து கேட்டனர். உடனே பயந்து போன சிறுமி அழுதுவிட்டார். சிறுமியின் தாத்தாவிடம் விமான பணிப்பெண்கள் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அப்போது தாத்தா கேட்டதும், விமான இருக்கை அருகே இருந்த பட்டனை அழுத்தியதாகவும் அப்போது அமர்ந்து இருந்த இருக்கை மேலே தூக்கியதோடு அதற்குள் இருந்து லைப் ஜாக்கெட் வெளியே வந்ததாகவும் சிறுமி கூறினார்.

தனது பேத்தி தெரியாமல் செய்துவிட்டதாக
இதையடுத்து விமான பணிப்பெண்கள் லைஃப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி இருக்கைக்கு அடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் மீண்டும் வைத்தனர். அதன்பிறகு விமானத்தில் சைரன் ஒலி நின்றது. இதைத் தொடர்ந்து 8 வயது சிறுமியின் தாத்தாவான ஹேம்நாத்திடம் விமானத்தின் தலைமை விமானி விசாரித்தார். அப்போது தனது பேத்தி தெரியாமல் இதை செய்துவிட்டதாகவும் மன்னிக்கும் படியும் ஹேம்நாத் கூறினார்.

உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பு
ஆனால், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வெண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதாகவும் அவர்கள்தான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் மன்னித்து விடுவதற்கோ எதேனும் முடிவு எடுப்பதற்கோ தனக்கு அதிகாரம் கிடையாது என்றும் விமானத்தின் தலைமை விமானி கூறினார். சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் விமான பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எச்சரித்து அனுப்பிய போலீசார்
விமானம் சென்னையில் தரையிறங்கியதும் ஹேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இண்டிகோ விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலைய அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, போலீசார் எழுத்துப்பூர்வ விளக்கம் வாங்கியதோடு எச்சரித்து ஹேம்நாத் குடும்பத்தினரை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications