ரூ 200 கோடி மோசடி.. சுகேஷ் கோடு போட்டால் அதில் ரோடு போட்ட நடிகை லீனா மரியபால்.. யார் இவர்?
டெல்லி: ரூ 200 கோடி மோசடி வழக்கில் தொடர்புடைய வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் காதலி நடிகை லீனா மரியபால் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்துள்ளார். அது போல் மலையாளத்தில் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, இந்தியில் மெட்ராஸ் கஃபே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ 18 கோடி மோசடி செய்ததாக இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர். கேரளா மாநிலம் கொச்சியில் இவர் வசித்து வருகிறார்.

காவல் துறை
கொச்சியில் ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். இவரை டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த லீனா பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் சிறையில் இருந்தபடியே பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டார் அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார் சுகேஷ்.

சொகுசு பண்ணை விடுதி
இந்த நிலையில் இந்த மோசடிக்கு லீனாவும் உடந்தை என சொல்லப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் நடிகை லீனாவையும் போலீஸார் கைது செய்தனர். இவரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சுகேஷ்- லீனாவுக்கு சொந்தமான சென்னை கானாத்தூரில் ஒரு சொகுசு பண்ணை விடுதி ஒன்று உள்ளது.

20 கார்கள்
இந்த விடுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 20 கார்களும் பல்வேறு விலை மதிப்பில்லாத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கியில் ரூ 18 கோடி மோசடி செய்த போதிலிருந்தே லீனா, சுகேஷுடன் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. சுகேஷ் திகார் சிறையில் இருந்தாலும், வெளியே உள்ள லீனா அவரது உத்தரவின்படி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

4 சென்னை இளைஞர்கள் கைது
சுகேஷுக்கு உதவியதாக கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து, சாமுவேல், வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகிய 4 இளைஞர்களும் கைதாகியுள்ளனர். இவர்கள் 4 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் கமலேஷ் கோத்தாரிதான் கானாத்தூரில் சொகுசு பங்களா வாங்க உதவியுள்ளாராம். அது போல் சொகுசு கார்கள் வாங்க சொகுசு கார்கள் வாங்க உதவியுள்ளார். சாமுவேல் நடிகை லீனாவின் மேலாளர், வழக்கறிஞர் மோகன்ராஜ், சுகேஷின் மோசடிகளின் துணை போனவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
