சஞ்சய் சிங் போல.. கெஜ்ரிவாலும் வெளியே வருவரா? தீர்ப்பை ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. தனது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை கெஜ்ரிவால் நாடியிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
இதனையடுத்து ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் கடந்த 1ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனவே, நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 2ம் எண் சிறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலுக்கு காவரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பெரும் லாபம் பார்த்தது ஆம் ஆத்மி கட்சிதான். கெஜ்ரிவால் இதற்கு மூளையாக செயல்பட்டு வருகிறார்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மறுபுறம் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "சம்மன் அனுப்பவும், ஆதாரங்களை சேகரிக்கவும் அதிகாரம் அளிக்கும் PMLA பிரிவு 50ஐ அமலாக்கத்துறை கடைப்பிடிக்கவில்லை" என்று விமர்சித்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சர்மா, வழக்கின் மீதான் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார். ஏற்கெனவே, ஆம் ஆத்மி நாடாளுமன்ற குழு தலைவர் சஞ்சய் சிங்-க்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications