புது பரபரப்பு- அதிமுக இரட்டை இலை சின்னம்- ஏப். 28 முதல் இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக தேர்தல் கமிஷன் உத்தரவு!
டெல்லி: அண்ணா திமுகவின் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கியதற்கு எதிரான விவகாரத்தில் வரும் 28-ந் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் வரும் 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம். அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா திமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது; அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் வழக்கு விசாரணை முடிவடையும் வரை அந்த சின்னத்தை எந்த தரப்புக்கும் ஒதுக்கக் கூடாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த தடைக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்பிக்கள் கேசி பழனிசாமி, ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனால் அதிமுக விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என அதிரடியாக தீர்ப்பளித்தது. இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடியாக பார்க்கப்பட்டது.
இதனிடையே அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையமானது வரும் 28-ந் தேதி முதல், இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக விவகாரங்களை விசாரிக்க இருக்கிறது. இதனால் வரும் 28-ந் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோரை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications