களமிறங்கும் இஸ்லாமியர்கள்.. வக்பு மசோதாவால் நாடு முழுதும் போராட்டம் அறிவித்த AIMPLB.. யார் இது?
டெல்லி: வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாடு முழுவதும் போராட்டங்களை தொடங்குவோம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வார்னிங் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் நடந்தது. கேள்வி நேரத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். கருப்பு உடை அணிந்து பலரும் சபைக்கு வந்திருந்தனர்.
நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை தாக்கல்செய்ய அனுமதி வழங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு நடுவே வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா என்பது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதன் மீதான விவாதம் என்பது நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை தொடர்ந்து வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் தான் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏஐஎம்பிஎல்பி என அழைக்கப்படும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தரப்பில், ‛‛வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இதனால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகளையும் மீறி வக்ஃபு சட்ட திருத்த மசோதா இன்று நிறைவேறினால் அமைதியாக இருக்க மாட்டோம். நாடு முழுவதும் போராட்டங்களை தொடங்குவோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்திந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் என்பது ஆங்கிலத்தில்All India Muslim Personal Law Board என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆங்கில சுருக்கம் தான் AIMPLB என்பதாகும். நம் நாட்டில் கடந்த 1937 ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்களுக்கான சட்ட முறைகள் அறிமுகம் ஆனது. இதனை ஒழுங்குப்படுத்தும் வகையில் தான் அனைத்திந்திர இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் என்பது அமைக்கப்பட்டது. இந்த வாரியம் கடந்த 197 3ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டங்களின் பாதுகாப்பு, மேம்பாடு தொடர்பான நடவடிக்கையை இந்த வாரியம் மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய வாரிசுரிமை, திருமணம், விவாகரத்து, சொத்து பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த வாரியம் அக்கறையுடன் செயல்பட்டு வருவதோடு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதனால் நம் நாட்டில் இந்த வாரியம் என்பது இஸ்லாமியர்கள் மத்தியில் முக்கிய அமைப்பாக உள்ளது. இப்படியான சூழலில் தான் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஏற்க முடியாது. இது நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப முக்கிய காரணம் உள்ளது. அதாவது நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இறைபணிக்காக நன்கொடையாக வழங்கும் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை வக்ஃபு வாரியம் தான் நிர்வகித்து வருகிறது. மாநிலங்களுக்கு மாநிலம் வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வக்ஃபு வாரியம் என்பது 1995-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்டங்களின் மூலம் செயல்பட்டு வருகிறது. தற்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு தான் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி வக்ஃப் வாரிய நிலத்தை அளவீடும் அதிகாரம் ஆணையரிடம் இருந்து கலெக்டரிடம் வழங்குவது, மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாத 2 பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். வக்ஃபு வாரியத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல அம்சங்கள் உள்ளன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் உள்ளன. இதனை இஸ்லாமியர்கள் மற்றும் வக்ஃபு வாரிய நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால் தான் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications