அதே ஏர் இந்தியா.. அதே சிக்கல்..! பிரிட்டனில் தரையிறங்கும்போது கடைசி நொடியில் ஷாக்! அதிர வைக்கும் சம்பவம்
டெல்லி: குஜராத்தில் கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 260 பேர் உயிரிழந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அதே பிரிட்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் நிகழ்ந்த அதேபோன்ற ஒரு சம்பவம் இந்த விமானத்திலும் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இண்டிகோ விமான நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர் இந்தியா உருவெடுத்து வருகிறது. டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா இதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால், சமீப காலமாக ஏர் இந்தியா விமானத்தில் நடக்கும் சில விஷயங்கள் அந்த நிறுவனத்திற்குச் சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது.

ஏர் இந்தியா
கடந்த ஜூன் மாதம் தான் ஏர் இந்தியா விமானம் குஜராத்தில் மிக மோசமான விபத்தில் சிக்கியது. இதற்கிடையே மீண்டும் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது மீண்டும் நடந்துள்ளது. நேற்று அக்டோபர் 4ம் தேதி இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பிரிமிங்காம் நகருக்குச் சென்ற விமானத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கச் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது திடீரென விமானத்தின் ராம் ஏர் டர்பைன் (RAT) இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நல்வாய்ப்பாக விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ராட் அமைப்பு
இரண்டு என்ஜின்களும் செயலிழக்கும்போதும் அல்லது மின்சாரம், ஹைட்ராலிக் அமைப்புகள் முழுமையாகச் செயலிழக்கும் போதும் மட்டுமே ராம் ஏர் டர்பைன் தானாகக் கீழே இயங்கும். இது காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி அவசரக்கால மின்சாரத்தை உருவாக்கும். குஜராத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த விபத்தின்போதும் இந்த ராட் கீழே இறங்கி இருந்தது. இதற்கிடையே மீண்டும் அதே பிரிட்டனுக்குப் போகும் விமானத்தில் அதேபோல ராட் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
விமானம் இப்போது சோதனைக்காக பர்மிங்காமில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பர்மிங்காம்- டெல்லி விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ராம் ஏர் டர்பைன்
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அக்டோபர் 4ம் தேதி அமிர்தசரஸ் முதல் பர்மிங்காம் சென்ற AI117 விமானத்தின் பணியாளர்கள், விமானம் தரையிறங்கும் இறுதிக் கட்டத்தில் ராம் ஏர் டர்பைன் இயங்குவதைக் கண்டனர். ஆனால், அனைத்து மின்சார மற்றும் ஹைட்ராலிக் சிஸ்டம் முறையாகவே இயங்கியுள்ளது. இதனால் விமானம் பர்மிங்காமில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.. இந்த ரூட்டில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஏர் இந்தியா அந்த தெரிவித்துள்ளது. குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி சில மாதங்களில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விபத்து
கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ரக AI 171 விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அது கட்டுப்பாட்டை இழந்து ஒரு கல்லூரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் இப்போது விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications