அது முற்றிலும் கட்டுக்கதை.. ஆடிப்போன மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் அலுவலகம் அவசர விளக்கம்
டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் அனைத்தும் மத்திய அரசுக்கு தான் செல்வதாக பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அது முற்றிலும் கட்டுக்கதை என்றும், மாநிலங்களுக்கு கணிசமான வருவாய் வழங்கப்படுகிறது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது: "ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் 2 குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அதிகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக, மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்திருக்கிறது.

ஏழைகளுக்கு ஆதரவான அணுகுமுறையை எதிரொலிக்கும் வகையில், 2017 முதல் சராசரி ஜி.எஸ்.டி. விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. வருவாய் நடுநிலை விகிதம் 15.3 சதவீதம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2017-ல் 14.4 சதவீதம் குறைவாக இருந்தது, அது 2019-ல் 11.6 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி.க்கு முந்தைய விகிதங்களுடன் ஒப்பிடும்போது பல அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளை ஜி.எஸ்.டி. குறைத்திருக்கிறது.
தலைக்கு தேய்க்கும் எண்ணெய் மற்றும் சோப்புகள் போன்ற பொதுவான பொருட்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மின்சாதனங்களின் வரி 31.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளுக்கும் குறைந்த வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
வணிக முத்திரை இல்லாத உணவுப் பொருட்கள், சில உயிர்காக்கும் மருந்துகள், சுகாதாரம், கல்வி, பொதுப்போக்குவரத்து, சானிட்டரி நாப்கின்கள், காது கேட்கும் கருவி உதிரிபாகங்கள், விவசாய சேவைகள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்கள்மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருக்கிறது.
ஜி.எஸ்.டி. இந்தியாவில் கூட்டுறவு கூட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன், மாநிலங்களுக்கும் அதிகாரம் அளிக்கிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு 75 சதவீதம் பெரும்பான்மை வாக்கு தேவை என்ற நிலையில், மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமையை மத்திய அரசிற்கும், மூன்றில் இரண்டு பங்கை மாநிலங்களுக்கும் வழங்கி உள்ளது. இதுவரை ஜிஎஸ்டி தொடர்பாக நடந்த 52 கூட்டங்களில், ஒன்றைத் தவிர அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்து மூலமே எட்டப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவராக, அனைத்து மாநிலங்களின் குரல்களும் பாரபட்சமின்றி சமமாக ஒலிக்கப்படுவதை நான் (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) உறுதி செய்துள்ளேன். ஜி.எஸ்.டி. வசூல் அனைத்தும் மத்திய அரசுக்கு மட்டுமே சொந்தமானது என்பது கட்டுக்கதை. மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. கணிசமான வருவாய் பங்களிப்பை வழங்கி வருகிறது. மாநிலங்கள் அந்த மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட எஸ்.ஜி.எஸ்.டி.யில் 100 சதவீதம் பெறுகின்றன. தோராயமாக, ஐ.ஜி.எஸ்.டி.யின் 50 சதவீதம் (அதாவது மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில்) சி.ஜி.எஸ்.டி.யின் குறிப்பிடத்தக்க பகுதி, அதாவது 42 சதவீதம், நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. இல்லாமல், நிதியாண்டு 2018-19 முதல் 2023-24 வரையிலான துணை வரிகள் மூலம் மாநிலங்களின் வருவாய் ரூ.37.5 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யின் மூலம் மாநிலங்களின் உண்மையான வருவாய் ரூ.46.56 லட்சம் கோடி. சிறந்த வரி நிர்வாகத்தின் மூலம், மத்திய மற்றும் மாநிலங்கள் கூட்டாக, நமது வரி செலுத்துவோர் மீது குறைந்த சுமையுடன் அதே வருவாயை வசூலிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.
எங்கள் தொடர்ச்சியான முயற்சிகள், வரிகளை உயர்த்துவதற்கு பதிலாக, சிறந்த வரி செலுத்துவோர் சேவைகள் மற்றும் அதிகரித்த செயல்திறன் மூலம் புதிய உயரங்களை எட்டுவதை நோக்கியே உள்ளன. ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கை நிறைவேற்ற, வரி செலுத்துவோர்க்கு உகந்த அமைப்பை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் கூட்டாக பணியாற்ற வேண்டும்" இவ்வாறு நிதியமைச்சக அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications