லக்கிம்பூர் சம்பவம்: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்! நீதிபதி சொன்ன காரணம் என்ன தெரியுமா- பரபர தகவல்
டெல்லி: லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ராவின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல மாதங்களாக இந்த போராட்டம் நீட்டித்த நிலையில், கடந்த நவ. மாதம் தான் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே கடந்த அக். 3ஆம் தேதி லக்கிம்பூர் பகுதியில் பேரணி சென்று திரும்பிய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டிருந்தார்.

அமைச்சர் மகனுக்கு ஜாமீன்
இந்தச் சம்பவம் காரணமாக அஜய் மிஸ்ரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இருப்பினும், அவர் அமைச்சரவையில் தொடர்ந்தார். இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் மேற்கு உபி வாக்குப்பதிவில் பெரியளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளைக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், போலீஸ் விசாரணையையும் நிராகரித்தது.

நீதிமன்றம் கேள்வி
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு உட்பட ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் பட்டியலிட்ட சில குற்றச்சாட்டுகள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக நீதிபதி, "போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஆஷிஷ் மிஸ்ரா நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விசாரணையில், உயிரிழந்தோரின் உடலில் அத்தகைய துப்பாக்கி காயங்கள் எதுவும் இல்லை. இறந்தவர்கள் அல்லது காயமடைந்த நபரின் உடலில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

ஜாமீன் தரலாம்
கார் டிரைவரை விவசாயிகள் மீது மோதத் தூண்டியதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், கார் ஒட்டுநர் உட்பட இருவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டனர். சம்மன் அனுப்பப்பட்ட உடன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கலாம்.

காரில் பயணித்தவர்கள்
காரில் பயணித்த மூவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதைக் கண்டு கண்களை மூடிக்கொள்ள முடியாது இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் போராட்டக்காரர்களின் மிருகத் தனத்தை தெளிவாகக் காட்டுகிறது. இந்த சம்பவத்தில் 4 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்களைத் தாக்கியவர்களின் விவரங்களைப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்,

எதிர்க்கட்சியினர்
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைச் சாடியுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள், அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications