அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஹைகோர்டுக்கு மாற்ற ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகி உள்ளது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் சர்மா மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வழக்கறிஞர் கிருஷ்ணா ராவ், நீதிபதிகள் பிபாஸ் ரன்ஜன் டி, அஜய் குமார் முகர்ஜி உள்ளிட்ட 3 பேர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார். தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்றல் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகம் முன்பு அனைத்து ஜனநாயக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது ஒருபுறம் எனில், உச்ச நீதிமன்ற கொலீஜிய முடிவு சரியானது என்றும், அதை எதிர்த்து போராடிய சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகத்தை சேர்ந்த 574 வழக்கறிஞர் கையெழுத்திட்ட கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பேட்டியளித்த பாஜக வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பேட்டிளித்தார். அப்போது, உச்ச நீதிமன்ற கொலீஜிய நடைமுறை சரியானது, மாற்றக்கூடாது என்றும், அதில் தலையீடுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications