50 வருட ஜோதி.. இந்தியா கேட் 'அமர் ஜவான் ஜோதி' இன்று தேசிய போர் நினைவுச்சின்ன விளக்குடன் இணைப்பு!
டெல்லி: இந்தியா கேட்டில் இருக்கும் அமர் ஜவான் ஜோதியை இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இணைக்க முடிவு செய்துள்ளனர். 50 ஆண்டுகளாக விடாமல் எரிந்து வந்த ஜோதி இன்று தேசிய போர் நினைவுச்சின்ன விளக்குடன் இணைக்கப்படுகிறது.
இந்தியா கேட் என்பது பிரிட்டிஷ் அரசு மூலம் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள் 1914-1921 இடையிலான முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. இங்குதான் இந்திய அரசு மூலம் அமர் ஜவான் ஜோதி என்ற நினைவு ஜோதி கட்டப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான 1971 போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமர் ஜவான் ஜோதி என்ற தீ பந்தம் இங்கு ஏற்றப்பட்டது. இந்த போரில் இந்திய வீரர்கள் 3800 பேர் வரை வீரமரணம் அடைந்தனர்.

அமர் ஜவான் ஜோதி
இவர்களின் நினைவாக கடந்த 50 வருடமாக இந்த தீ பந்தம் விடாமல் எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த அமர் ஜவான் ஜோதி மற்றும் நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தின் போது இந்திய பிரதமர் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இங்கு சென்று மரியாதை செலுத்துவார்கள். மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்துவார். ஆனால் 2020ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதி முன் மரியாதை செலுத்தி வருகிறார்.

தேசிய போர் நினைவு
அமர் ஜவான் ஜோதி முன் மரியாதை செலுத்தாமல் தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தி வருகிறார். இந்த வருடமும் பிரதமர் மோடி தேசிய போர் நினைவு சின்னம் இருக்கும் இடத்தில்தான் மரியாதை செலுத்த இருக்கிறார். இந்த நிலையில்தான் இந்தியா கேட்டில் இருக்கும் அமர் ஜவான் ஜோதியை இன்றோடு இடமாற்றம் இந்திய பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. 50 ஆண்டுகளாக விடாமல் எரிந்து வந்த ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

ஜோதி
தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இதை இணைக்க முடிவு செய்துள்ளனர்.ஏற்கனவே தேசிய போர் நினைவு சின்னத்தில் இந்தியாவிற்காக உயிர் நீத்த அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் பெயரும் உள்ளது. 1947ல் இருந்து இந்தியாவிற்காக வெவ்வேறு போர்கள், சண்டைகளில் இறந்தவர்கள் பெயர்கள் இங்கு உள்ளது. கால்வானில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பெயர்கள் வரை இங்கு உள்ளது. 25,942 வீரர்களின் பெயர்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

இணைக்க முடிவு
இங்கும் ஒரு ஜோதி எரிந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு ஜோதி எரிந்து கொண்டு இருக்கும் நிலையில் அமர் ஜவான் ஜோதி அவசியம் இல்லை என்பதால் அதை இணைக்க முடிவு செய்துள்ளனர். இரண்டு ஜோதியை தொடர்ந்து எரிய வைத்துக்கொண்டு இருப்பது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஒரு ஜோதி மட்டும் எரியும்.

குடியரசுத் தினம்
2019ல் பிரதமர் மோடி மூலம் டெல்லியில் 40 ஏக்கர் பரப்பில் 146 கோடி ரூபாயில் தேசிய போர் நினைவு சின்னம் எழுப்பப்பட்டது. இங்குதான் 2020ல் இருந்து குடியரசுத் தின விழாவின் போது பிரதமர் மோடி மரியாதை செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் மொத்தமாக இந்தியா கேட்டிற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, அங்கு இருக்கும் அமர் ஜவான் ஜோதி இன்று தேசிய போர் நினைவு சின்ன ஜோதியோடு இணைக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஜோதியை இணைக்கும் நிகழ்வு பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications