Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே பலதார மணம் முஸ்லிம்களில் தான் குறைவு! சொன்னது சட்ட கமிஷன் - எஸ்ஒய் குரேஷி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. முஸ்லிம்களின் பலதார மணத்துக்கு கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமையும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பலதார மணம் முஸ்லிம்களில் தான் குறைவு என சட்ட கமிஷன் கூறியுள்ளதாக இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி விரிவாக விளக்கி உள்ளார்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது மத்திய பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே உள்ளது. பொது சிவில் சட்டம் என்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

 Amid of Uniform Civil Code Debate polygamy is less among muslims says law commission few years back

அதாவது நாட்டில் வாழும் அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து பகிர்வு உள்ளிட்டற்றில் எந்த பாகுபாடும் இன்றி ஒரே மாதிரியான நடைமுறையை கொண்டு வருவது தான் பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மத்திய அரசு இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மேலும் பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்துகளை கோரும் நடவடிக்கையை மத்திய சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பான பொது அறிவிப்பை, கடந்த 14ம் தேதியே சட்ட ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி அடுத்த 30 நாட்களில் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மதஅமைப்பினர் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது கருத்து கேட்பு நடந்து வருகிறது.

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசினார். அப்போது, ‛‛ஒரு நாட்டில் எப்படி 2 சட்டங்கள் இருக்க முடியும்?. பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இந்த சட்டத்தை அனைத்து மக்களும், எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

மேலும் இந்த மாதம் துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடரிலேயே அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே தான் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் நோக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதில் ஒன்று தான் முஸ்லிம்களின் பலதார மணத்தை கட்டுப்படுத்துவது என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது. முதலில் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு தற்போது பொது சிவில் சட்டம் மூலம் முஸ்லிம்களின் பலதார மணத்துக்கு தடை போட உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் Outlook பத்திரிகையில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி விரிவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பலதார மணம் என்பது இந்தியாவில் முஸ்லிம்களிடம் தான் குறைவாக உள்ளது என சட்ட கமிஷன் தெரிவித்து இருப்பதாக குரேஷி கூறியுள்ளார். இதுதொடர்பாக குரேஷி எழுதியிருப்பதாவது:-

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது என்பது நூற்றாண்டுக்கு முன்பே பரபரப்பாக விவாதிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் இன்று வரை ஒரு முடிவுக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்திலும் பலமுறை விசாரணை செய்யப்பட்டும் தெளிவான தீர்ப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் தான் நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக பல மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக அரசுகளால் கூட இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் சட்ட கமிஷனால் கூட இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் தான் 2வது முறையாக மீண்டும் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. மேலும் நானும் கூட பொது சிவில் சட்டம் ஏன் முக்கியம்? என கேட்டால் முஸ்லிம்களிடம் பலதார மணம் நடைமுறை உள்ளது. இதற்கு தீர்வு காண பொது சிவில் சட்டம் வேண்டும் என கூறுகின்றனர்.

பொதுவாக முஸ்லிம்கள் பலதார மணம் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக உள்ளது. இதற்கு சட்ட கமிஷன் கூறிய தகவலை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். இந்தியாவில் பலதார மணம் குறித்து சட்ட கமிஷன் அறிக்கையில் முக்கிய விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் பலதார மணம் என்பது முஸ்லிம்களிடம் குறைவு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் பலதார மணம் என்பது பழங்குடியின மக்களிடம் 15.25 சதவீதம் என்ற அளவிலும் பவுத்தர்களிடம் 9.7 சதவீதம் எனவும், ஜைனர்களிடம் 6.72 சதவீதம் எனவும், இந்துக்களிடம் 5.8 சதவீதம் எனவும், முஸ்லிம்களிடம் 5.7 சதவீதம் எனவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூட 2010ல் நடந்த வழக்கில், ‛‛இந்துக்களின் ரகசிய இருதார மணம் என்பது முஸ்லிம்களின் வெளிப்படையான பலதார மணத்தை விட மோசமானது'' என கருத்து தெரிவித்தது. இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இஸ்லாமிய நாடுகளாக அறியப்படும் மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சிரியா, லெபனான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்டவற்றில் பலதார மணத்தை தடுக்கும் நோக்கத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. சேர்ந்து வாழும் மனைவியின் அனுமதியின்றி அடுத்த திருமணம் செய்வது சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் 2015ல் சட்டம் இயற்றியது.

இதனால் சட்ட கமிஷன் அறிக்கையின்படி பொது சிவில் சட்டத்துக்கு பதில் பிற சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என நினைக்கிறேன். மேலும் முஸ்லிம் நாடுகளின் பின்பற்றப்படும் நடைமுறையை ஆய்வு செய்து நீதிமன்ற தலையீட்டின்படி முஸ்லிம்கள் பின்பற்ற குறிப்பிட்ட சட்டத்தை உருவாக்க முடியும்'' என அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+