‛‛தமிழகத்தில் கணிசமான இடங்களை பாஜக வெல்லும்’’.. தென்மாநிலங்களிலும் மலரும் தாமரை - அமித்ஷா நம்பிக்கை
டெல்லி: எதிர் வரும் நாடாளும்ன்ற தேர்தலில் பாஜக, தென்மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெறும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாஜகவுக்கு மிகவும் சவாலானதாகும். ஏனெனில், காங்கிரஸுடன், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒன்று சேர்ந்திருப்பதால் பாஜவுக்கான வெற்றி வாய்ப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இருக்காது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் 39+1 தொகுதிகளில் இந்தியா கூட்டணிதான் வெற்றிக்கொடி நாட்டும் என்றும், ஒன்றிரண்டு தொகுதிகளில் அதிமுக வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், கேரளாவிலும், கர்நாடகாவிலும் இந்தியா கூட்டணியின் கை ஓங்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. ஆந்திராவில் என்டிஏ கூட்டணிக்கு கொஞ்சம் வாய்ப்பிருந்தாலும், தெலங்கானாவில் காங்கிரசின் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.
சுருக்கமாக சொல்வதெனில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மொத்தம் 129 தொகுதிகளில் 100 இடங்களில் பாஜக தோற்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில், தென் மாநிலங்களை குறி வைத்து பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 30 நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி 6 முறைக்கு மேல் தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்திருக்கிறார்.
நேற்று முன்தினம் கோவையில் ரோட் ஷோவும், நேற்று சேலத்தில் கூட்டணி கட்சியினருடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தையும் பிரதமர் மோடி நடத்தியிருந்தார்.
இந்நிலையில், தனியார் செய்தி ஊடகம் நடத்தி மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென் மாநிலங்களில் பாஜக கணிசமான இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, “மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கணிசமான இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மகாராஷ்டிராவில் கட்சி 41 இடங்களில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உடைந்ததற்கு சரத் பவார்தான் காரணம் என்றும், சிவசேனா உடைந்ததற்கு உத்தவ் தாக்ரேதான் காரணம் என்றும் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பெண் முதலமைச்சர் இருக்கும் நிலையில், சந்தேஷ்காலியில் வன்முறை நடந்தது எப்படி? அவர்கள் கறுப்பு சந்தையில் தானியங்களை விற்கின்றனர். சிஏஏ அமலாக்க முடியாது என்று தைரியமாக கூறுகின்றனர். இதற்கு பின்னால் சதி இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications