பிரதமர் மோடி திறந்து வைத்த பகுதியில் விபத்து நடக்கவில்லை.. விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
டெல்லி: டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பகுதியை பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்னர் திறந்து வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை தொடங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை நீடித்தது. டெல்லி வரலைாற்றில் கடந்த 88 ஆண்டுகளில் இவ்வளவு மழை பெய்தது கிடையாது. எனவே பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. அதேபோல டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் பயணிகளுக்காக காத்திருந்த கால் டாக்சி கார்கள் அப்படியே அப்பளம் போல நொறுங்கின. காருக்குள் இருந்த ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயனைப்புத்துறை தெரிவித்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இதற்கிடையில் விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் விரிவாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்ததாக தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சியனர் பிரதமர் மீது விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.

இந்த விபத்திற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சோஷியல் மீடீயாக்களில் இது தொடர்பான பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், பாஜக தலைவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியை மோடி திறந்து வைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் ஒரு உயிர் பலியாகியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ.3 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். இந்த விபத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய விரும்புகின்றன.
இது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெர்மினல் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடி மற்றொரு முனையத்தில் உள்ள கட்டிடத்தைதான் திறந்து வைத்தார். தற்போது இடிந்து விழுந்துள்ள மேற்கூரை 2009ல் கட்டப்படட்து. 15 ஆண்டுகள் பழமையான கட்டிடம்தான் இடிந்து விழுந்திருக்கிறது. எனவே இது குறித்த விவகாரங்களை தோண்டி எடுக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications