இது புதிய இந்தியா.. ‘பெரிய அண்ணன்’ செல்போன் உரையாடலை ஒட்டுகேட்பார் என்று பயம் - மார்க்கரெட் ஆல்வா
டெல்லி: புதிய இந்தியாவில் 'பெரிய அண்ணன்' கட்சி எல்லைகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளுக்கு இடையிலான உரையாடல்களை பார்க்கவும் ஒட்டுக்கேட்கவும் செய்வார் என்ற பயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா குற்றம்சாட்டி இருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதி நிறைவடைந்தது.

பாஜக வேட்பாளர்
இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்படார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.

மார்க்கரெட் ஆல்வா
இரு தரப்பு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்க்கரெட் ஆல்வா ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அதில், "பாஜகவை சேர்ந்த சில நண்பர்களுடன் பேசி முடிந்த பிறகு, எனது செல்போனுக்கு வரும் அழைப்புகள் டைவர்ட் செய்யப்படுகின்றன. என்னால் எந்த அழைப்பையும் செய்ய முடியவில்லை. எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

மொபைல் எண்
இனி பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தொடர்புகொள்ள மாட்டேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் பதிவிட்டு உள்ள MTNL கடிதத்தில் சிம் கார்டு KYC ரத்து செய்யப்பட்டதால் 24 மணி நேரத்துக்குள் முடக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒட்டுக்கேட்பு புகார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அடுத்த பதிவில், "புதிய இந்தியாவில் பெரிய அண்ணன் எப்போது கட்சி எல்லைகளை கடந்து அரசியல்வாதிகளுக்கு இடையேயான உரையாடல்களை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறார் என்ற பயம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட போன்களை வைத்திருக்கின்றனர். அடிக்கடி செல்போன் எண்களை மாற்றுகின்றனர். அவர்கள் சந்திக்கும்போது குசுகுசுவென பேசுகின்றனர். அச்சம் ஜனநாயகத்தை கொன்றுவிடும்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications