குஜராத்தை தொடர்ந்து பீகார்.. சாட்டையை சுழற்றும் ராகுல்..ஆர்ஜேடி கூட்டணி மோதலுக்கு முற்றுப்புள்ளி?
டெல்லி: குஜராத்தில் பாஜகவுக்கான பி டீம் ஆக உருமாறிய காங்கிரஸ் கட்சியினரை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களையும் டெல்லிக்கு வரவழைக்கிறார் ராகுல் காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பீகாரில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 122. 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் பாஜக 74; நிதிஷ்குமாரின் ஜேடியூ 43, காங்கிரஸ் 19, சிபிஐ எம்எல் 12 இடங்களில் வென்றது.

பாஜக, ஜேடியூ முதலில் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது; பின்னர் ஆர்ஜேடி-காங்கிரஸ்- ஜேடியூ இணைந்து 2-வது கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பாஜகவுடன் ஜேடியூ கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. 5 ஆண்டுகளில் அடுத்தடுத்து கூட்டணியை மாற்றிக் கொண்டே இருந்தவர்தான் முதல்வர் நிதிஷ்குமார்.
தற்போது பீகார் மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. பீகார் தேர்தல் களத்தில் ஆளும் பாஜக, ஜேடியூவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் களம் காண்கின்றன.
பாஜக கூட்டணியைப் பொறுத்தவரையில் ஜேடியூவின் ஆதரவில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பீகார் நிதிஷ்குமாரையே முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக் கொண்டும் விட்டது.
ஆனால் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. ஆர்ஜேடியைப் பொறுத்தவரையில் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளர்; ஆர்ஜேடி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களோ, தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் யார் என முடிவெடுப்போம்; காங்கிரஸ் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்கின்றனர்.
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் இதேபோல காங்கிரஸ் கட்சி மல்லுக்கட்டி இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு பெரும் தோல்வியைத் தழுவின. தேர்தலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்திருந்தால் டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்திருக்க முடியாது என்கிற பாடத்தையும் இரு கட்சிகளுமே கற்றுக் கொண்டன.
இந்த பின்னணியில் அண்மையில் குஜராத் சென்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் சிலர் பாஜகவின் பி டீமாக செயல்படுவதை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்திருந்தார். இதே வேகத்துடன் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் ராகுல் காந்தி கூடியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பீகார் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பீகாரில் ஆர்ஜேடியிடம் அதிகமான இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுக்காமல் வெல்லும் வாய்ப்புள்ள கணிசமான தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெற வேண்டும்; முதல்வர் வேட்பாளர் பற்றி பேசி ஆர்ஜேடி கூட்டணிக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்கிற எச்சரிக்கைகளை டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி முன்வைப்பார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications