அய்யோ பாவமே! நிதிஷ் குமாருக்கு இப்படி ஒரு வினோத வியாதி! 'இந்தி இந்தி' என எப்போது கதறுவார் தெரியுமா?
டெல்லி: பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ் குமார் 'இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி' என கூச்சலிட்டு பேசுவது ஒரு தொடர் கதையாகி வருகிறது என்கின்றன வட இந்திய ஊடகங்கள்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் "இந்தியா" கூட்டணி. இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களுக்கும் போய் அலைந்து திரிந்துதான் "இந்தியா" கூட்டணியை உருவாக்கினார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இதில் "இந்தி மொழி' பேசாத தமிழ்நாடும் ஒன்று.

காணாமல் போன இந்தியா கூட்டணி: "இந்தியா" கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் பாட்னா, பெங்களூர், மும்பையில் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் நிதிஷ் குமார் இந்தி மொழியில் பேசும் போது அக்கட்சியின் மற்றொரு தலைவரான மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது வழக்கம். மும்பை ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் "இந்தியா" கூட்டணியின் செயல்பாடுகள் முடங்கிப் போனது.
நப்பாசையில் நிதிஷ்: "இந்தியா" கூட்டணியை நிதிஷ்குமார் உருவாக்கியதே தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் அல்லது குறைந்தபட்சம் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியாவது கிடைக்கும் என்கிற நப்பாசைதான். ஆனால் 5 மாநில தேர்தலை காரணம் காட்டி "இந்தியா" கூட்டணி என்ற கட்டமைப்பையே காங்கிரஸ் கட்சி பரணில் ஏற்றி வைத்துவிட்டது. இதனால் 5 மாநில தேர்தல் நடக்கும் போதே நிதிஷ்குமார் ரொம்பவே கடுப்படித்து பேசி வந்தார்.
டெல்லி ஆலோசனை கூட்டம்: இந்தப் பின்னணியில் டெல்லியில் நேற்று முன்தினம் "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நிதிஷ்குமாரை கடுப்பேற்றும் வகையில் மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதில் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார் எழுந்து பேச தொடங்கினார். அப்போதுதான் வழக்கம் போல, எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த மனோஜ் ஜாவிடம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டுமே என திமுகவின் டிஆர் பாலு கூறினார். மனோஜ் ஜாவும் நிதிஷ் குமாரின் இந்தி மொழி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.
ஸ்டாலின், டிஆர் பாலு மீது பாய்ந்து பிராண்டிய நிதிஷ்: அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி. இது இந்துஸ்தானி. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு போன போதே அவர்களது ஆங்கில மொழியும் போய்விட்டது. நீங்களும் இந்தி படித்தாக வேண்டும் என கூச்சலிட்டதுடன் மொழி பெயர்த்து கொண்டிருந்த மனோஜ் ஜா மீதும் எரிந்து விழுந்தார். நிதிஷ்குமாரின் இந்த அருவறுப்பான செயலை "இந்தியா' கூட்டணி தலைவர்கள் எவருமே ரசிக்கவில்லை. பின்னர் இந்தியா கூட்டணி கூட்டம் முடிவதற்கு முன்னரே நிதிஷ்குமார் எழுந்து போய்விட்டார். இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒருங்கிணைந்த செய்தியாளர் சந்திப்பிலும் நிதிஷ்குமார் உட்காரவில்லை.
சீண்டும் தமிழ்நாடு பாஜக: தற்போது இந்த விவகாரத்தை முன்வைத்து, தமிழ்நாடு பாஜகவினர் திமுகவினரை சீண்டி வருகின்றனர். நிதிஷ்குமார் அப்படி பேசும் போது, இந்தி தெரியாது போடா என சொல்லி இருக்க வேண்டும்; இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகின்றனர் தமிழ்நாடு பாஜகவினர்.
அய்யோ இந்தியை அழிக்கிறீங்களே.. : ஆனால் வட இந்திய ஊடகங்களோ, நிதிஷ்குமாருக்கு ஒரு வினோத வியாதி இருப்பதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன. பீகார் மாநிலம் பன்காவில் கடந்த செப்டம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நிதிஷ்குமார். அப்போது டிஜிட்டல் நூலகத்தின் பெயர் பலகை ஆங்கிலத்தில் மட்டும் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த நிதிஷ்குமார், அதிகாரிகளைக் கூப்பிட்டு டோஸ் விட்டாராம். அதாவது இந்தியில்தான் எழுதனும்- எதற்காக ஆங்கிலத்தில் எழுதி வைக்கனும்? இந்தி மொழியோட முக்கியத்துவத்தையே அழிக்கிறீங்க.. நம்ம மொழி இந்தி. உடனே மாற்றுங்க என கூச்சலிட்டாராம்.
பீகாரா? இங்கிலாந்தா? இந்தியில் பேசுய்யா...: அதேபோல பிப்ரவரி மாதத்தில் பாட்னாவில் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் லக்கிசாராய் மாவட்டத்தைச் சேர்ந்த அமித்குமார் என்ற விவசாயி பங்கேற்று ஆங்கிலத்தில் பேசினார். உடனடியாக நிதிஷ் குமார் தன்னிலை மறந்தவராக கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார். என்ன இது? இது பீகார். பீகார் மாநிலத்தில் பேசுறோம் என்பது தெரியுமா தெரியாதா? அதெப்படி இந்தி தாய் மொழியை மறந்துட்டு ஆங்கிலத்தில் பேசலாம்? இது என்ன இங்கிலாந்தா? இது பீகார்.. பீகார்.. தாய் மொழி இந்தி.. இந்தி என கதறியடியபடியே பேசினாராம் நிதிஷ்குமார். அதாவது இந்தியாவில் இந்தி மொழி பேசாத மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் எவரேனும் பேசிவிட்டாலே நிதிஷ்குமார் தனது இயல்புநிலை மறந்து, இந்தி மொழி வெறியுடன் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பதுதான் அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள். அய்யோ பாவமே!












Click it and Unblock the Notifications