இரவோடு இரவாக சுற்றி வளைத்த போலீசார்.. ஆளும் ஜேடியு வேட்பாளர் அதிரடி கைது.. கொலை வழக்கில் பரபரப்பு
பாட்னா: பீகாரில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு ஜேடியு வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த் சிங் இப்போது இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் ஆதரவாளர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் அவரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது ஜேடியு, ஆர்ஜேடி மற்றும் ஜன் சூராஜ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை ஆனந்த் சிங்கை போலீசார் கைது செய்தனர். துலார் சந்த் யாதவ் என்பவர் கொலை வழக்கில் ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர்.

கொலை
துலார் சந்த் ஒரு தாதாவாக இருந்து பிறகு அரசியல்வாதியாக மாறியவர். இதற்கு முன்பு ஆர்ஜேடி கட்சியில் இருந்த அவர், சமீபத்தில் தான் பிரசாந்த் கிஷோர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். தன் மருமகன் பிரியதர்ஷி பியூஷுக்கு பிகே சீட் கொடுத்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக மோகாமா தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.
மூவர் கைது
மோகாமா தொகுதியின் ஜேடியு வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏ நீலம் தேவியின் கணவருமான ஆனந்த் சிங் இந்த கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பர்ஹ் நகரில் உள்ள இல்லத்தில் அவருடன் சேர்த்து மணிகாந்த் தாக்கூர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாட்னா எஸ்எஸ்பி கார்த்திகேய ஷர்மா கூறுகையில், "துலார் சந்த் யாதவ் கொலையில் அனந்த் சிங், மணிகாந்த் தாக்கூர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துலார் யாதவ் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சி ஏற்பட்டு, மாரடைப்பால் அவர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்தினோம்" என்றார்.
ஆனந்த் சிங்
முன்னதாக கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சிங், தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது போலக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "எனது ஆதரவாளர்களுடன் அவர் வாக்குவாதம் செய்தார். ஆனால், அப்போது நான் அந்த இடத்தில் இல்லை.. என்ன நடந்தது என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.. ஆனால், அவருடைய அடியாட்கள் எங்கள் ஆதரவாளர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். எனக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக இந்தக் கொலையை நடத்தியுள்ளனர்" என்றார்.
யார் இந்த ஆனந்த் சிங்
கடந்த 2020 பீகார் சட்டசபைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் ஆனந்த் சிங் தான் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2022 இல் ஆயுதச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மனைவி நீலம் தேவி ஜேடியு சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் ஜேடியுவில் பிறகு இணைந்தார்.
பீகார் தேர்தலைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. முதற்கட்டமாக அங்கு நவம்பர் 6ம் தேதி 121 சீட்களிலும், நவம்பர் 11ம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இரு கட்டங்களில் பதிவாகும் தேர்தல் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications