பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை.. ஆகஸ்ட் 8 டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்தும் இந்தியா கூட்டணி
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், வியூகங்களை விட வாக்காளர் பட்டியல் விவகாரம் தான் தீவிர விவாதமாகியுள்ளது. இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக கொண்டு செல்வதற்காக இந்தியா கூட்டணி அதிரடி முடிவை எடுத்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி விருந்துடன் ஆலோசனை மேற்கொள்வதுடன், ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பிரம்மாண்ட பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள்ளாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் பாஜக - தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் கூறி வருகிறார்கள்.

பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தில் 7.93 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது ஆவணங்கள் சமர்பித்து இறுதி நிலவரப்படி 7.23 கோடி வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 80 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், என்னுடைய பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பீகாரில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் பாஜக தலைவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடக்கவில்லை என்று விளக்கம் கூறி வருகிறார்கள்.
வாக்காளர் பட்டியலை இணையத்தில் சோதனை செய்து கொள்ளலாம். மேலும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியிலில் இணையலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இதற்கு எதிராக தீவிரமாக போராட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்தியா கூட்டணி பேரணி
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதற்கு நாடாளுமன்ற விதிகளை காரணம் காட்டி மத்திய அரசு மறுத்து வருகிறது. இது தங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இந்தியா கூட்டணி டெல்லியில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அன்றைய தினம் இரவு இதற்காக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசு தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனையும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வரை பேரணியாக செல்லவும் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications