களத்தில் மோடி.. நள்ளிரவை தாண்டிய மீட்டிங்! லோக்சபா தேர்தலுக்கு பாஜக கையில் எடுக்கும் வெற்றி பார்முலா
டெல்லி: வேட்பாளர் தேர்வு தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜக உயர்மட்ட கூட்டம் நேற்று நள்ளிரவைத் தாண்டி தொடர்ந்து நடந்துள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இரு கூட்டணிகளும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் மும்முரமாக இருக்கிறது.
உயர்மட்ட கூட்டம்: இதற்கிடையே லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிடுவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜகவின் உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்னரே ஒரு பகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்தியா கூட்டணி இன்னும் தொகுதிப் பங்கீட்டையே முழுமையாக முடிக்காத நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. நேற்றிரவு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தொடர்பாகவே தீவிர ஆலோசனை நடந்துள்ளது.
நள்ளிரவைத் தாண்டிய ஆலோசனை: பிரதமர் மோடி தனது இல்லத்தில் அமித் ஷா மற்றும் நட்டாவை தனியாகச் சந்தித்த நிலையில், மறுபுறம் பாஜகவின் உயர்மட்ட குழுவினர் பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். மூத்த தலைவர்களான தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக்பாய் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சாவந்த், பூபேந்திர யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா, கேசவ் மவுரியா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
எந்த மாநிலங்கள் டார்கெட்: நள்ளிரவைத் தாண்டி நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது அதேநேரம் பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி இறுதியாகாத நிலையில், இந்த மாநிலங்களில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கவில்லை.
ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இப்போது ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் அதாவது மார்ச் 10ஆம் தேதிக்கு முன்னதாகவே 50 சதவீத லோக்சபா தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்திலும் பாஜக இதே திட்டத்தைத் தான் பின்பற்றி இருந்தது. அப்போது தேர்தல் அறிவிப்பு வர பல வாரங்களுக்கு முன்னதாக, மார்ச் 21இல் பாஜக 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக நடத்திய சர்வேயில் எந்த தொகுதிகளில் எல்லாம் வெல்ல வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதோ.. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications