ஒரே பான் இந்தியா கட்சி பாஜக.. யூட்யூப், ட்விட்டர் மூலம் வளர்ந்த கட்சி இல்லை.. பிரதமர் மோடி பேச்சு!
டெல்லி : கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான். வெறும் 2 எம்.பிக்களுடன் தொடங்கிய பயணம் இன்று 303 இடங்களை தொட்டிருக்கிறது எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் கூடுதலாக கட்டிடடங்கள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் தாமரை அனைத்து இடங்களிலும் மலர்ந்து வருகிறது எனப் பேசியுள்ளார்.
மேலும், கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழல்வாதிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர் முடக்கம்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதலே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. இன்று நாடாளுமன்றம் தொடங்கியதும், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை புகாரை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தியும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை தொடங்கி ஒரு நிமிடத்திற்குள்ளாகவே முடங்கியது. இதேபோல மாநிலங்களவை தொடங்கியதும் அமளி ஆரம்பமானது. அவை நடவடிக்கைகள் தொடர்ந்தபோது அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் 10 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை இயங்கியது.

டெல்லி பாஜக அலுவலகம்
இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் தற்போது 303 தொகுதிகளுக்கு பரவியுள்ளது. நாட்டின் 4 திசைகளிலும் பரவிய ஒரே தேசிய கட்சியாக பாஜக உள்ளது. பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி மட்டுமல்ல, எதிர்காலம் சார்ந்த மிகப்பெரிய பார்வையைக் கொண்ட கட்சி. பாஜகவின் இலக்கு நவீன, வளர்ச்சியடைந்த இந்தியா" எனத் தெரிவித்தார்.

பான் இந்தியா கட்சி
மேலும் பேசிய அவர், "1984ல் இந்த நாடு மிகவும் துயரமான காலத்தை அனுபவித்தது. காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது, நாம் அனைவரும் அந்த அலையில் முற்றிலும் அழிந்தோம். ஆனால் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை, மற்றவர்களைக் குறை கூறவில்லை. இன்று கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான். குடும்பக் கட்சிகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒரே பான் இந்தியா கட்சியாக உள்ளோம். வெறும் 2 எம்.பிக்களுடன் தொடங்கிய பயணம் இன்று 303 இடங்களை தொட்டிருக்கிறது.

ட்விட்டர், யூடியூபால் வளரவில்லை
நமக்கு மிக வலிமையான ஜனநாயக அடித்தளம் உள்ளது. அதை தடுப்பதற்காகவே ஜனநாயக அமைப்பை தாக்குகிறார்கள். ஜனநாயக அமைப்புகள் தங்களது கடமைகளை செய்தால் அவை விமர்சிக்கப்படுகின்றன. பாஜக தொலைக்காட்சி மூலமோ, செய்தித்தாள் மூலமோ வந்த கட்சி இல்லை. ட்விட்டர் கணக்குகள் மூலமோ அல்லது யூடியூப் மூலமோ வளரவில்லை. தொண்டர்களின் கடின உழைப்பால் வளர்ந்த கட்சி இது.

70 ஆண்டுகளில் இதுவே முதல் முறை
கடந்த 70 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது இவ்வளவு நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை. இதை இன்னும் தீவிரமாக்கினால் சிலர் வருத்தமடைவார்கள். இன்னும் சிலர் கோபப்படுவார்கள். ஆனால், ஊழல்வாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நிச்சயம் நிறுத்தப்படாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உடனே பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாது." என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications