"புது மோடி"யை களம் இறக்கும் பாஜக.. 240 தொகுதிகளில் பெரும் லாபத்தை ஈட்ட.. பலே திட்டம்!
பெரும் லாபத்தை ஈட்ட புதிய மோடியை களம் இறக்க பாஜக யோசித்து வருகிறது.
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் மிச்சம் உள்ள 240 தொகுதிகளிலும் பெரும் வெற்றியை பெற பாஜக பலே திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.
இதுவரை நாடாளுமன்றத்திற்கு 3 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள தேர்தலில் மோடியின் புதிய முகத்தை, இதுவரை பார்த்திராத முகத்தை மக்களிடம் காட்டி ஆதரவை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு மோடி அளித்த பேட்டியிலேயே இது கோடிட்டுக் காட்டப்பட்டது. அதாவது மோடி என்றால் இறுக்கமான மனிதர் என்ற பிம்பத்தை உடைப்பது போல இந்த பேட்டி இருந்தது. மோடிக்கு ஜோக் அடிக்கவும் தெரியும், மோடிக்கு சிரிக்க தெரியும், மோடி ஜாலியாக பேசக் கூடியவர் என்ற புதிய பிம்பத்தை இந்தப் பேட்டி காட்டியது.

புதிய முகம்
இந்தியா இதுவரை பார்த்திராத மோடியின் முகம் அது. இதுதான் பாஜகவின் புதிய உத்தியாக கூறப்படுகிறது. இதுவரை பார்த்திராத மோடியைக் காட்டினால் நிச்சயம் தங்களுக்கான வாக்கு சதவீதம் உயரும், ஆதரவு அதிகரிக்கும் என்பது பாஜகவின் எண்ணமாகும். அதாவது வாக்காளர்களிடையே புதிய ஆச்சரிய அலையை ஏற்படுத்தி அதை தங்களுக்குச் சாதகமாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

நடவடிக்கை
வாரணாசியில் பாஜக நடத்திய மிக பிரமாண்டமான பேரணியும், அதில் மோடி கலந்து கொண்டதும் கூட இந்த உத்தியில் ஒன்றுதானாம். இந்த பிரமாண்டத்தை தேர்தல் நடைபெறவுள்ள 240 தொகுதிகளிலும் பிரதிபலிக்க செய்யும் நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறதாம்.

புதிய அஸ்திரம்
சீரியஸ் மோடியை அகற்றி விட்டு கேஷுவல் மோடி என்ற முகத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதே பாஜகவின் புதிய பிரம்மாஸ்திரம் என்கிறார்கள். முதல் மூன்று கட்டங்களில் மோடி அலையை உருவாக்க முடியாமல் தோல்வியுற்று விட்டது பாஜக. மொத்தம் 302 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடந்துள்ளது. இங்கு பாஜக அலை பெரிதாக வீசவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மீதமுள்ள தொகுதிகளில் நிலையை மாற்ற இந்த புதிய அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாம்.

பெரும் சிரமம்
முதல் மூன்று கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற மாநிலங்கள் எது என்று பார்த்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்கள் ஆகும். இதில் தெற்கில் பாஜகவின் நிலை பாஜகவுக்கே நன்றாகத் தெரியும். இனி நடக்கவிருக்கும் தேர்தல் வட இந்தியா மற்றும் பிற மாநிலங்கள் என்பதால் இங்கு பெரிய அளவில் அள்ளி விட வேண்டும் என்று பாஜக தீவிரமாக உள்ளது. இதையும் விட்டால் பெரும் சிரமம் என்பதால் இந்த திட்டம்.

மேற்கு வங்கம்
அடுத்த நான்கு கட்ட தேர்தல் பீகார், உ.பி, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகள் உள்ளன. அடுத்த நான்கு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில்தான் (மேற்கு வங்கம் தவிர்த்து) கடந்த 2014 தேர்தலில் பெரிய வெற்றியைப் பாஜக பெற்றது என்பது நினைவிருக்கலாம்.

பாஜக முனைப்பு
இதன் காரணமாகவே புதிய மோடியை இந்த மாநிலங்களில் மக்கள் மனதில் பதிய வைத்து அந்த ஆச்சரியம் குறையாத நிலையிலேயே வெற்றியை வாரி எடுத்து விட வேண்டும் என்று பாஜக புதிய முனைப்பு காட்டி வருவதாக சொல்கிறார்கள். எனவே அடுத்தடுத்த பிரச்சாரங்கள் உள்ளிட்டவற்றில் மோடியின் புதிய முகத்தைக் காண முடியும் என்று அரசியல் நிபுணர்களும் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications