டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில்.. 2 நோயாளிகளின் குடலில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டுபிடிப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இரண்டு கொரோனா நோயாளிகளின் குடல் பகுதியில் கருப்பு பூஞ்சை தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸே மக்களை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்று வேகமாக பரவி வருகிறது.

அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று ஆதிக்கம் உள்ளது. இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 219 பேர் இந்த நோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. கண் மற்றும் நுரையீரலை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குடலில் கருப்பு பூஞ்சை
இந்த நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இரண்டு கொரோனா நோயாளிகளின் குடல் பகுதியில் கருப்பு பூஞ்சை தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நோயாளிகளும் ஏற்கனவே நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக சர் கங்கா ராம் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவை அரிதானவை
''கருப்பு பூஞ்சை' பொதுவாக நுரையீரலை தாக்கும் என்று கூறப்பட்டு இருப்பதால் இந்த இரண்டு நிகழ்வுகளும் அரிதானவை. நோயாளிகளில் சிறுகுடலில் கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு நோயாளிகளுக்கும் கொரோனா இருந்தது, நீரிழிவு நோயும் இருந்தது, ஆனால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஸ்டெராய்டுகள் கிடைத்தன" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள்
கொரோனா குணமடைந்த பிறகு வயிற்று வலி இருந்ததால் சி.டி ஸ்கேன் செய்த பிறகு நோயாளிகளின் சிறு குடலின் கருப்பு பூஞ்சை' தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இருவருக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. கருப்பு பூஞ்சை தொற்று கண் மற்றும் நுரையீரலை அதிகம் பாதிக்கும் என்று மருதத்துவர்கள் கூறி இருக்கின்றனர். தற்போது சிறு குடலில் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications