இன்னொரு நிர்பயா: பெண் அதிகாரியை கொடூரமாக சிதைத்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்#JusticeForRabiya
பெண் அதிகாரியை கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் 21 வயதான காவல்துறை பெண் அதிகாரியை கடத்திச் சென்ற ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. மீண்டும் ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை போன்ற ஒரு நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பெண் அதிகாரியை கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு சிவில் டிபென்ஸ் காவல்துறை அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு,தொண்டை அறுக்கப்பட்டு,அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அவரது கனவு சில மாதங்களுக்கு முன்புதான் நனவானது. சில மாதங்களுக்கு முன்புதான் காவல்துறை பணி கிடைத்தது.
கிழக்கு டெல்லியின் உள்ள காவல்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி அவர் மாயமானார். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று கொலை செய்து விட்டு உடலை வீசி விட்டு சென்று விட்டனர்.
பெண் காவல்துறை அதிகாரியின் சடலத்தை மீட்ட கிழக்கு டெல்லி போலீஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை குறித்து விசாரணையை தொடங்கியது காவல்துறை.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை போன்ற ஒரு நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நிர்பயா போன்ற ஒரு சம்பவம் நடந்தும் பல ஊடகங்கள் ஆப்கானிஸ்தானின் நலனில் பிஸியாக உள்ளன, இதுவரை எங்கள் சகோதரி ராபியாவுக்கு நீதி கிடைக்கவில்லை என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டன.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது நிஜாமுதீனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஆனால், காவல்துறையினர் தன்னை தேடுவது தெரிந்து தலைமறைவானார் நிஜாமுதீன். தப்பிக்க முடியாது என்று தெரிந்த பின்னர் காவல்நிலையத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெண் காவல் அதிகாரியுடன் தனக்கு திருமணம் நடைபெற்றாக கூறியுள்ளார். இந்த திருமணத்தை பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால், இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
காதலி தான் முக்கியம் என்று அவளை கரம் பிடித்தேன். என்னுடைய வீட்டாரைக்கூட மறந்து விட்டு அவளது நலன்தான் முக்கியம் என்று அவளுடன் இருந்தேன். அரசாங்க பணியில் சேர்ந்தாள், எங்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. சில வாரங்களாக அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது.
பேச்சிலும் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்படவே எனது சந்தேகத்தை அவளிடம் கேட்டேன். எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதை விட்டு விடச்சொல்லி பலமுறை சொன்னேன் அவள் கேட்கவில்லை.
பலமுறை சொன்னேன் அவள் கேட்கவில்லை.
அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கேயும் எங்களுக்கு சண்டை வந்தது. வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. கோபம் அதிகரிக்கவே அவளை நான் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். இந்த கொலை பற்றி விவரித்த போது நிஜாமுதீன் முகம் உக்கிரமாக இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நிஜாமுதீன் கூறுவதை மறுத்துள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர், கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளனர்.
தங்கள் வீட்டுப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாகவும், அதை மறைக்கவே தங்கள் மகள் மீது நிஜாமுதீன் அபாண்டமாக குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பாக நியாயமான முறையில் விசாரித்து கொலையின் உண்மை பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை தேவை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணின் பெற்றோர். எங்கள் மகளை ஏமாற்றி வலையில் வீழ்த்திய நிஜாமுதீன் அவளை திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பது கூட உறுதியாக எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள நிஜாமுதீன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்கள் மகளைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை அவள் வெளியில் கூறி விடுவாளோ என்ற பயத்தில் தான் அவர்கள் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜோதிமணி எம்.பி பதிவு

பெண்ணின் படுகொலை சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி எம்.பி, டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும்,வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும் என்று கூறியுள்ள ஜோதிமணி சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்கவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர். இதில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இப்போது கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறை அதிகாரியாக வேலை செய்தவர். அதுவும் அவரது உறுப்புகள் சிதைக்கப்பட்டு 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் எத்தனை நிர்பயாக்கள் இதுபோல கொடூரமாக மரணிக்கப் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் மட்டுமே நிர்பயாக்களுக்கு நீதி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications