பாஜக & எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. இரு அவைகளும் இன்றும் முடங்கின! திங்கள் வரை ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் 5ஆம் நாள் அமர்வும் இன்று முடங்கியது.
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5ஆம் நாள் இன்று கூடுகிறது.. ஆளும் தரப்பு ராகுல் லண்டன் பேச்சையும் எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் குறித்தும் வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் அமளியால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற தொடர் கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மறுநாள் பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமர்வு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அவை தொடங்கி 4 நாட்கள் ஆன போதிலும், அவை நடவடிக்கைகள் நடந்த பாடில்லை. 4ஆவது நாளான நேற்றும் முதலில் இரு அவைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பின்னர் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி
காங்கிரஸின் ராகுல் காந்தி தனது பாரத் ஜடோ யாத்திரையை முடித்துக் கொண்டு லண்டன் சென்றிருந்தார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, உரையாற்றினார். அப்போது இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாகச் சாடியிருந்தார். இது தவிர பல்வேறு கருத்துகளை அவர் லண்டனில் கூறியிருந்தார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.

ஆளும் தரப்பு
வெளிநாட்டில் இருந்து கொண்டு ராகுல் காந்தி இப்படிப் பேசியது தவறு என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல அமைச்சர்கள் முன்னரே கூறியிருந்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய பின்னரும் கூட பலரும் இதையே வலியுறுத்தியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றே பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள்
அதேநேரம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. தான் இந்தியாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை என்றும் பிரதமர் மோடி இதற்கு முன்பு என்ன செய்தாரோ அதைத்தான் தானும் செய்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். அதேபோல ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றே கார்கேவும் தொடர்ந்து கூறி வருகின்றார். இது மட்டுமின்றி அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றும் முடங்கியது
இதன் காரணமாக நாடாளுமன்ற இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்தே அவை முடங்கியே வருகிறது. 4ஆவது நாளான நேற்று இரு அவைகளிலும் அமளி தொடர்ந்த நிலையில், பிற்பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டன. அவை மீண்டும் தொடங்கிய நிலையில், அப்போதும் ஆளும் கட்சி ராகுல் காந்தி விவகாரத்தையும் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரத்தையும் எடுத்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது. 5ஆவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், ஆளும் கட்சி எம்பிகளும் எதிர்க்கட்சி எம்பிகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கிய நிலையில், இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications