பட்ஜெட் 2025.. நிர்மலா சீதாராமன் குழுவில் உள்ள 6 பேர்.. தலையெழுத்தை முடிவு செய்வதே அவர்கள் தான்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இன்னும் சற்று நேரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய பட்ஜெட்டை 8வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இருக்குமா என்பதே மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதன்படி நிர்மலா சீதாராமனுடன் சேர்த்து மொத்தமாக 7 பேர் அந்த குழுவில் உள்ளனர்.

அதில் முதல் நபராக தலைமை பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன் இருக்கிறார். ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த இவர், பட்ஜெட்டின் இலக்கை நிர்ணயிப்பதற்கு பொறுப்பானவர். அதேபோல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் வெளியாகும் பொருளாதார ஆய்வறிக்கை உருவாக்கும் குழுவிற்கு இவர் தான் தலைமை தாங்குகிறார். இவரின் பதவிக்காலம் நடப்பாண்டுடன் நிறைவடைகிறது.
இந்த குழுவில் 2வது இடத்தில் நபராக மத்திய அரசின் செலவின செயலாளராக உள்ள மனோஜ் கோவில் இருக்கிறார். ஐஐடி கான்பூரில் படித்துள்ள அவர், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல், செலவினங்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து தேவைகளை நிறைவேற்றுபவர். 1991ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு செலவின செயலாளராக பொறுப்புக்கு வந்தார். ஏற்கனவே கார்ப்பரேட் விவகாரத்துறையில் பெற்ற அனுபவம், பட்ஜெட்டுக்கும் சாதகமாக இருக்கும்.
இந்த குழுவில் உள்ள 3வது நபர் அஜத் சேத். பொருளாதார விவகாரத் துரையின் செயலாளராக 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர், பட்ஜெட்டுக்கான இறுதி ஆவணங்களை தயாரித்தல், மேக்ரோ பொருளாதாரத்தில் உறுதித்தன்மை உறுதி செய்தும் மற்றும் பட்ஜெட் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து 4வது நபராக நிதி மற்றும் வருவாய்த்துறை செயலாளராக உள்ள துஹின் காந்தா பாண்டே இருக்கிறார். ஒடிசாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த மாதம் தான் வருவாய்த்துறை செயலாளராக பொறுப்புக்கு வந்துள்ளார். சொத்து மேலாண்மையில் அனுபவம் கொண்ட துஹின் பாண்டே, அரசின் வருவாயை உயர்த்துவது மற்றும் வரிவிதிப்பு முறையை எளிதாக்க வேண்டிய சவாலை ஏற்றிருக்கிறார்.
பின்னர் 5வது நபராக அருணிஷ் சாவ்லா இருக்கிறார். பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், முதலீடுகளை கண்காணிப்பது மற்றும் அரசு நிறுவனங்களின் சொத்துகளை கண்காணிப்பதில் அனுபவம் கொண்டவர். இறுதியாக திரிபுராவைச் சேர்ந்த 1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான நாகராஜு இருக்கிறார். இவர் கடன் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பொறுப்பில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications