புதைச்சு இறுதி அஞ்சலியே பெங்களூரில் பண்ணீட்டீங்க.. திமுக, காங்கிரஸை வச்சு செய்த பிரதமர் மோடி
டெல்லி: இந்தியா கூட்டணியிலுள்ள அனைவருக்கும் பிரதமர் ஆசை உள்ளது.. பெயரை மாற்றினாலும் இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது என பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பாஜக மறுத்தது. அமித்ஷா பதில் அளிப்பார் என்றே கூறியது. ஆனால் பிரதமர் பதில் அளித்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று பிடிவாதமாக இருந்தன.

இதனிடையே இதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் போட்டு பிரதமர் நரேந்திர மோடியை பேச அழைத்து இருக்கின்றன இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் பாஜகவை பல்வேறு கேள்விகளால் துளைத்து எடுத்தன. குறிப்பாக திமுக எம்பிக்கள் அதிக அளவு கேள்விகளை எழுப்பின உச்சகட்டமாக நேற்று ராகுல் காந்தி பேசியது நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக அதிர வைத்தது.
இந்தியாவை கொன்றுவிட்டீர்கள் என்று அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் பாஜகவினரை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. நேற்று நாடாளுமன்றமே ராகுல் காந்தி பேச்சால் அதிர்ந்தது. அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி அமித் ஷா வரை கடுமையான பதிலடியும் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்றும் விவாதம் அனல் பறந்தது. இறுதியாக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது பேச ஆரம்பிக்கும் போதே, எதிர்க்கட்சிகளின் விவாதத்தை கூர்ந்து கவனித்து வந்ததாக கூறியவர். ஒவ்வொரு கட்சி வாரியாக விளாசியபடி பதிலடி கொடுத்தார். காங்கிரஸ், திமுக என எந்த கட்சியையையும் விட்டு வைக்கவில்லை. மொத்தமாக விளாசினார்.
போடுவது எல்லாம் நோபாலா என எதிர்க்கட்சிகளை கிண்டலும் செய்தார். இதுபற்றி கூறும் போது "ஒருமுறை நோபால் போட்டால் பரவாயில்லை நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப நோபாலை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நோபால் போடுகிறீர்கள் நாங்கள் சிக்ஸர் அடிக்கிறோம் செஞ்சுரி அடிக்கிறோம். கொஞ்சமாவது தயாராக மாட்டீர்களா" என்று பிரதமர் மோடி கிண்டல் செய்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். கூட்டணி இறந்ததற்கான இறுதி அஞ்சலி பெங்களூருவில் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கிண்டல் செய்தார். இந்தியா கூட்டணியிலுள்ள அனைவருக்கும் பிரதமர் ஆசை உள்ளது.. பெயரை மாற்றினாலும் இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.
1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆஸ்ட்ரிச் மன நிலையில் இருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தங்கள் தலையை மறைத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்க முயற்சிக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
2 தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவர் இது இந்தியா பற்றிய பிரச்சனை அல்ல தமிழ்நாடு பற்றியது என்று ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார் பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள் என்று திமுக அமைச்சர் எ.வ.வேலுவை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
முன்னதாக எ.வ-வேலு, இந்தியா என்றால் ஏதோ வடக்கில் தூரத்தில் இருக்கும் ஊர் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்குத் தான் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சர் ஸ்மிருதி இரானி கூட நேற்று பேசும் போது இதை குறிப்பிட்டு தான் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications