'நமது படைகளை நினைத்து பெருமை கொள்கிறேன்..' மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் கடைசி வீடியோ
டெல்லி: இந்தியா கேட் மைதானத்தில் நடைபெறும் ஸ்வர்னிம் விஜய் பார்வ் நிகழ்ச்சியில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசிய கடைசி காணொலி ஒளிபரப்பரட்டது.
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெற்றது. வெறும் 13 நாட்கள் மட்டுமே நடந்த இந்த போரில் இந்தியா மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது.
இந்திய ராணுவத்தின் அதிரடி ஆக்ஷன்களை கண்டு திணறிய பாகிஸ்தான் வெறும் 13 நாட்களில் சரணடைந்தது.

இந்திய ராணுவம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையிலும் இந்திய- வங்கதேச நட்புறவைக் குறிக்கும் வகையிலும் இந்திய கேட் பகுதியில் ஸ்வர்னிம் விஜய் பர்வ் கொண்டாட்டம் இன்று தொடங்கியது. முதலில் பிரம்மாண்டமான முறையில் இந்த கொண்டாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முப்படை தலைமை தளபதியின் திடீர் மரணம் காரணமாக எளிமையான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கடைசி வீடியோ வெளியீடு
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசிய கடைசி காணொலி ஒளிரப்பட்டது. சுமார் 1.10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பிபின் ராவத், வங்கதேச விடுதலைக்கு வழிவகுத்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்திய வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்துப் பேசியுள்ளார். மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி செலுத்துகிறேன்
அந்த வீடியோவில் தளபதி பிபின் ராவத் பேசுகையில், "இந்த ஸ்வர்னிம் விஜய் பர்வ் விழாவில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1971 போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை ஸ்வர்னிம் விஜய் பர்வ் என்ற பெயரில் நாம் கொண்டாடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நமது வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

பெருமை கொள்கிறேன்
இதற்காக டிசம்பர் 12 முதல் 14 வரை இந்தியா கேட்டில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நமது வீர வீராங்கனைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் விஜய் பர்வ் நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரியது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். நமது படைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

பிபின் ராவத் விபத்து
சூலூர் ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விபத்தில் சிக்கியது. குன்னூர் அருகே நடந்த இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில். தளபதி பிபின் ராவத்தின் இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ விபத்து ஏற்படுவதற்கு முந்தை நாள், அதாவது டிசம்பர் 7ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
முன்னதாக இதே நிகழ்வில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த நிகழ்வைப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது, ஆனால் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு, இதை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், நான் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன்.
Recommended Video

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
இந்த நாளில், 1971 போரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அந்தத் துணிச்சலான வீரர்களின் தியாகத்திற்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும். இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது. 1971இல் பாகிஸ்தானின் திட்டங்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இப்போது பயங்கரவாத்தைத வேரிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications