ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு போட்ட கண்டிப்பான உத்தரவு
டெல்லி: வரும் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக இதிகாச புராணத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. அன்றைய தினம் பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், கும்பாபிஷேகம் தொடர்பாக தவறான தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ராமர் தொடங்கி அயோத்தியை ஆண்ட பல்வேறு மன்னர்களும் ஸ்ரீரங்கம் கோயிலைதான் குலதெய்வமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல ராமாயணத்துடன் ராமேஸ்வரம் கோயிலும் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இந்த இரண்டு தலங்களுக்கும் பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications