வெங்காயம் விலை... மக்களே இன்று முதல் ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
டெல்லி: இன்று வெங்காயம் கிலோ ரூ.25-க்கு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
தக்காளி விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் , 3 மாதங்கள் கழித்து தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதேநேரம் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலை விரைவில் பெரிய அளவில் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயரலாம் என கணித்துள்ள மத்திய அரசு, விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை இப்போதே எடுத்து வருகிறது.

அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்திருந்தது. இதனிடையே வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதவிர, இன்னொரு அதிரடி நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துள்ளது, முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்த முடிவுசெய்துள்ளது இதற்காக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்து கூடுதல் கொள்முதல் இலக்கை அடைய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயங்களை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து வினியோகிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.
வெங்காயத்தின் சில்லரை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம் அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய சந்தைகளில் வெளியிடுவதை தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லரை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 21ம் தேதி முதல் (அதாவது இன்று முதல்) சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்துள்ளது. அரசின் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிச்சயம் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும்" இவ்வாறு மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications