வரி பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு.. தமிழத்திற்கு ₹5700 கோடி! உ.பி-க்கு ரூ.25,069 கோடி
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடந்து முடிந்த நிலையில், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்து இருக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது.

நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்கு பிறகு ஒருவர் இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
அமைச்சரவை கூட்டம்: நேற்று 30 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய 5 அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே இன்றைய தினம் என்டிஏ கூட்டணி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னரே எந்த அமைச்சர்களுக்கு எந்த இலாகா என்ற விவரம் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
உபி-க்கு அதிக நிதி: இதில் அதிகபட்ச நிதி உத்தரப் பிரதேசத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. உபி மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திற்கு ரூ.14,056 கோடியும் , மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.10,970 கோடியும் மேற்கு வங்கத்திற்கு ரூ.10,513 கோடியும் வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாநிலங்களுக்கு மட்டுமே 10 ஆயிரம் கோடிக்கு மேலான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு 8828 கோடியும், ராஜஸ்தானுக்கு 8421 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு 6327 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு (ரூ. 5700 கோடி), ஆந்திரப் பிரதேசம் (ரூ. 5655 கோடி), கர்நாடகா (ரூ. 5096 கோடி) மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு எவ்வளவு: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்திருந்தது.. இந்தச் சூழலில் தான் இப்போது இரண்டாவது முறையாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி பகிர்வை அளித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ரூ.2,79,500 கோடி நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications