நாடு முழுக்க வரப்போகும் புதிய அணுமின் நிலையங்கள்.. மத்திய அரசு போட்டுள்ள திட்டம்! வெளியான தகவல்
டெல்லி: நமது நாட்டில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் அணு உலைகளை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நிலக்கரி போதியளவில் கிடைக்காத மாநிலங்களில் அணு உலைகளைக் கூடுதலாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது வாகனங்கள் முதற்கொண்டு மின்சார வாகனங்களாக மாறும் நிலையில், மின் தேவை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மின் தேவை: வருங்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் நமது நாட்டில் நிலக்கரி மூலம் அனல் மின்நிலையம் மூலமாகவே அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது மொத்த மின் தேவையில் சுமார் 75% இப்போது அனல் மின்நிலையம் மூலமாகவே கிடைக்கிறது.
இருப்பினும், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது அதிகளவில் காற்று மாசு ஏற்படும். மேலும், நிலக்கரி எப்படியும் ஒரு காலத்தில் இல்லாமல் போகும். இதை எல்லாம் கருத்தில் கொண்டே மத்திய அரசு இப்போது மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக அணு மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
அறிவுறுத்தல்: மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின் அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. அப்போது நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறும், அணுசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்குமாறும் அமைச்சர் மனோகர் லால் கேட்டுக் கொண்டு இருக்கிறார். நாட்டில் மின் தேவை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதை மனதில் வைத்தே இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியிருக்கிறார்.
தனியார் நிறுவனங்கள்: மின் தேவையைப் பூர்த்தி செய்யத் தனியாருடன் இணைந்து சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கடந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் மேலும் பேசுகையில், "அனல் மின் நிலையங்கள் தங்கள் வாழ்நாளை நிறைவு செய்த இடங்களில் அணுமின் நிலையங்களை அமைப்பதை மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மின்சாரத் துறையில் தேவையான முதலீடுகளைப் பெற மாநிலங்கள் மின்சாரப் பயன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றைப் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கச் சொன்ன அமைச்சர், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.
அணுமின் நிலையங்கள்: இந்தியாவில் இப்போது மொத்தம் 24 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அணுசக்தித் துறையின் கீழ் வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் என்.பி.சி.ஐ.எல். என்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த என்.பி.சி.ஐ.எல். என்பது அரசு பொதுத்துறை நிறுவனமாகும்.
நமது நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களில் இருந்து இப்போது சுமார் 8 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 2032ம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட்டிற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாகும்.
ஆர்வம் இல்லை: தற்போது இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைப்பதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லையாம். இழப்பீடு தொடர்பான கடுமையான சட்டங்கள் மற்றும் அணுமின் நிலையத்திற்கான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என சொல்லப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications