சீனாவின் "வாட்டர் பாம்.." உலகின் மிக பெரிய அணையால் இந்தியாவுக்கு தான் ஆபத்து! என்ன தான் சிக்கல்?
டெல்லி: இந்தியா சீன எல்லையில் உள்ள திபெத்தில் யர்லுங் சாங்போ நதியின் மீது உலகின் மிகப் பெரிய நீர்மின் திட்டத்தைக் கட்டும் பணிகளைச் சீனா ஆரம்பித்துள்ளது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், ஆற்றின் நீரோட்டத்தைச் சீனா கட்டுப்படுத்தவோ அல்லது திசை திருப்பவோ முடியும் என்று அஞ்சப்படுகிறது. இது இந்தியாவுக்கு ஏன் சிக்கல்! இதை ஏன் வாட்டர் பாம் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது பிரம்மபுத்திரா நதியைச் சீனாவில் யர்லுங் சாங்போ நதி என அழைக்கிறார்கள். இந்த நதி திபெத்தில் உற்பத்தியாகி அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, பின்னர் அச்சாம் மற்றும் வங்கதேசம் வரை பாய்கிறது. இந்த மாநிலங்களில் முக்கிய நீர் ஆதாரமாகவும் பிரம்மபுத்திரா இருக்கிறது. இந்தச் சூழலில் தான் சீனா திடீரென உலகின் மிகப் பெரிய அணையை இங்குக் கட்ட முடிவு செய்தது.

சீனாவின் வாட்டர் பாம்
இதற்கான கட்டுமான பணிகளைச் சீனா ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது. இருப்பினும், திபெத்தில் பிரம்மபுத்திரா மீது அணை கட்டப்பட்டால் அது இந்தியாவுக்குச் சிக்கலையே தரும் எனப் பலரும் எச்சரிக்கிறார்கள். அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, இந்த திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது எங்கள் பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும். சீனா இதனை ஒரு 'வாட்டர் பாம்' ஆக கூட பயன்படுத்தலாம்" என்று அவர் கூறினார்.
"கிரேட் பெண்ட் அணை" (Great Bend Dam) என்று அழைக்கப்படும் இந்த அணையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே சீனாவின் திட்டம். இதன் மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இது சீனாவின் தற்போதைய மிகப் பெரிய அணையான 3 கோர்ஜஸ் அணையை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்தியா, வங்கதேசம்
இந்த நதி சீனா மட்டுமின்றி இந்தியா, வங்கதேசத்திலும் பாய்கிறது. இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் இந்த நதியை நம்பி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது திடீரென இதன் குறுக்கே நதியைக் கட்டினால் அது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய பெரிய திட்டம் இமயமலை பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும். மேலும், சீனாவின் கட்டுப்பாட்டில் இந்த நதி சென்றுவிட்டால் அது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் வல்லுநர் குழு எச்சரித்துள்ளது.
ஏனென்றால் இந்த நதி நீரைப் பகிர்வது தொடர்பாகச் சீனா சர்வதேச நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் எதிலும் கையெழுத்திடவில்லை. இதனால் சீனாவால் முழு அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்தியாவில் வலியுறுத்திக் கேட்க முடியாத நிலை ஏற்படும். சீனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், இந்த திட்டம் இந்தியாவுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்கிறார் அருணாச்சல பிரதேச முதல்வர் காண்டு கூறினார். அணை கட்டப்பட்டு, அவர்கள் திடீரென தண்ணீரைத் திறந்துவிட்டால், நமது சியாங் பகுதி முழுவதும் அழிந்துவிடும் என்றும் காண்டு எச்சரிக்கிறார்.
இந்தியாவின் பிளான்
இதற்குப் பதிலடியாக, அருணாச்சல பிரதேசத்தில் 10 ஜிகாவாட் நீர்மின் நிலையமான சியாங் அப்பர் மல்டிபர்பஸ் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த அணை மின் உற்பத்திக்கு மட்டுமின்றி, ஒரு பாதுகாப்பு அரணாகவும் செயல்படும் என்று காண்டு தெரிவித்தார். மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சீனா தனது பெரிய அணையின் கட்டுமானம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும், கட்டுமானம் ஏற்கனவே தொடங்கி இருக்கலாம் என்று அருணாச்சல முதல்வர் காண்டு குறிப்பிடுகிறார்.. சீனாவின் அணையால் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் இந்த திட்டம் உதவும். அதாவது எதிர்காலத்தில் சீனா தண்ணீரை திடீரென திறந்துவிட்டால் வெள்ளம் ஏற்படும்..! ஆனால் அதை இந்த அணை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் காண்டு!

பெரிய பாதிப்பு
சீனா இந்த அணை பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. குறிப்பாக எத்தனை பேர் இடம்பெயர வேண்டி இருக்கும்.. சுற்றுச்சூழல் சீர்குலைவு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. சீனாவின் 3 கோர்ஜஸ் அணை திட்டத்திற்காகவே சுமார் 13 லட்சம் பேர் வெளியேற வேண்டி இருந்தது. இந்த அணை அதைவிட 3 மடங்கு பெரியதாக இருப்பதால் அதிகப்படியான மக்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சீன வல்லுநர்கள்
கிரேட் பெண்ட் அணைக்காக 420 கி.மீ. தூரத்திற்குச் சுரங்கங்கள் அமைக்கப்படும். நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் இந்த அணை கட்டப்படுவதால் இந்தளவுக்குச் சுரங்கங்கள் அமைப்பது நிலைமையை மோசமாகவே ஆகும். நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதைச் சீன நிபுணர்களே எச்சரித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இப்படிப் பல ஆபத்துகள் இருப்பதாலேயே இந்தியா இதைக் கூர்ந்து கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications