சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்.. ராஜ்நாத் சிங் அதிரடி
டெல்லி: சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா சீனா இடையே லடாக்கில் சண்டை முற்றி வருகிறது. எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலைமை உள்ளது.கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.

என்ன மீட்டிங்
இந்த நிலையில் தற்போது முப்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்தார். ராணுவப்படை, விமானப்படை, கடற்படை அதிகாரிகள், மேஜர்கள், ஜெனரல்கள் இதில் இடம்பெற்று இருந்தார்கள். அதேபோல் முப்படை தளபதி பிபின் ராவதும் இதில் இடம்பெற்று இருந்தார். ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக மீட்டிங் நடந்தது.

லடாக் குறித்து ஆலோசனை
லடாக்கில் என்ன நிலைமை இருக்கிறது. அங்கு கல்வான் பகுதியில் சூழ்நிலை எப்படி உள்ளது. சீனாவின் துருப்புகள் எங்கே உள்ளது. ஆயுதங்கள் எந்த அளவிற்கு இறக்கப்பட்டு உள்ளது என்று இன்று ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. இந்திய படைகளின் தயார் நிலை எப்படி உள்ளது, முப்படைகள் எந்த அளவிற்கு தங்கள் வீரர்களை தயாராக வைத்துள்ளது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சாட்டிலைட் படங்கள்
இன்னொரு பக்கம் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முக்கிய சில ரிப்போர்ட்கள், சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டப்பட்டது. எல்லையில் சீனாவின் கட்டுமானம் குறித்த சாட்டிலைட் படங்கள் ஆகும் இது. இதன் மூலம் எல்லையில் நிலைமை எப்படி உள்ளது, எங்கெல்லாம் அத்துமீறல் உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து ஆலோசனை செய்தார்கள்.

முழு சுதந்திரம்
சீனாவுடனான எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தியாகம் வீணாகாது
நேற்றுதான் இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் எல்லை பாதிப்பு குறித்து பேசினார். அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது. நாங்கள் பதிலடி கொடுக்க தயாராகி இருக்கிறோம். இந்தியா எதற்கும் தயாராக இருக்கிறது. விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. விமானப்படை எதற்கும் தயாராக உள்ளது என்று இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications