அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை! போலீசார் மீது அட்டாக்.. அமித் ஷா அவசர மீட்டிங்! டெல்லியில் பரபர
டெல்லி: இன்று டெல்லி ஜஹாங்கிர் பூரி பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது திடீரென வன்முறை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜஹாங்கிர் பூரி பகுதியில் இன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வன்முறை வெடித்தது.
இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், அங்கிருந்த பலரும் இந்த வன்முறையில் மக்கள் காயமடைந்தனர்.

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்
இந்தச் சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் வன்முறையில் காயமடைந்தவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் வன்முறையாளர்களை ஒடுக்க முயன்றனர்.

கற்களை வீசி தாக்குதல்
இருப்பினும், போலீசாரையும் மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வன்முறை ஏற்பட்ட சில மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "அமைதி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என்பதால் அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தேசிய தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது; மக்கள் அமைதி காக்க வேண்டும்" என்று கூறினார். இந்த வன்முறை காரணமாக அப்பகுதியில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா ஆலோசனை
வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி சிபி மற்றும் சிறப்புச் சிபி தீபேந்திர பதக்கிடம் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வன்முறையைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை உடன் இணைந்து சுமார் 200 விரைவு அதிரடிப் படையினர் அங்குக் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

பாஜக கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவின் மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல கமில் மிஸ்ரா இந்த தாக்குதலைப் பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications