உலகமே வியக்கும் தத்துவத்தை ஏந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்.. இந்தியாவில் வென்ற தொகுதிகள் இவ்வளவுதானா!
டெல்லி: இந்தியாவில் ஒரு காலத்தில் வீரியமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது வெறும் 8 இடங்களில் சுருங்கியுள்ளன. இதில் 4 இடங்கள் தமிழகத்திலிருந்து கிடைத்திருக்கிறது.
இந்த உலகத்தில் உள்ள பெரும் செல்வங்களை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு, அதில் பங்கு கிடையாது என்று துரத்தியடிக்கப்பட்டபோது கம்யூனிசம், புரட்சி எனும் கோட்பாட்டை முன்வைத்தது. சோவியத் ரஷ்யா, கியூபா, சீனா, வியட்நாம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்றும் கம்யூனிசம் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்த அளவில் முதன் முதலில் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்தது. சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்த முதல் மாநிலம் கேரளாதான். இன்றும் கேரளாவில் சிபிஎம் ஆட்சியில் இருக்கிறது. இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகளில் சிபிஎம், சிபிஐ கூட்டணி போட்டியிட்டது. ஆனால் ஆலத்தூர் தொகுதியில் மட்டுமே சிபிஎம் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதிலும், வெறும் 20,111 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெயித்திருக்கிறார். மீதமுள்ள 19 தொகுதிகளில் 14ல் காங்கிரசும், 2ல் ஐயுஎம்எல், பாஜக 1, கேஇசி 1, ஆர்எஸ்பி 1 தொகுதி என வெற்றி பெற்றிருக்கிறது. கேரள மாநிலத்தில் ஆட்சியிலிருந்தும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் திருப்பூர், நாகை, மதுரை, திண்டுக்கல் என 4 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. கடந்த 2019 தேர்தலிலும் 4 தொகுதிகளில் கம்யூனிஸ்டுகள் வென்றிருந்தனர். இந்த முறை நாகையில் செல்வராஜ், திருப்பூரில் சுப்பராயன், மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வாக்கு வித்தியாசத்தை பொறுத்த அளவில் திருப்பூர் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகளை பெற்றிருக்கிறார். இது இரண்டாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் வாங்கிய ஓட்டுகளை விட 1,25,928 வாக்குகள் அதிகம். அதேபோல நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் 4,65,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த திமுக வேட்பாளரை விட 2,08,957 கூடுதலாக வாக்குகள் பெற்று ஜெயித்திருக்கிறார்.
மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை விட 2,09,409 வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் 6,70,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த முகமது முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.
கேரளா, தமிழ்நாடு தவிர ராஜஸ்தானிலும் சிபிஎம் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். அம்மாநிலத்தின் சிகர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அமரா ராம் 6,59,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த பாஜக வேட்பாளரை விட இவர் கூடுதலாக 72,896 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
இது தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஐ - எம்எல்) சார்பில் 2 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீகாரின் ஆரா தொகுதியில் சுதாமா பிரசாத் 5,29,382 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். அதேபோல பீகாரின் கராகட் தொகுதியில் ராஜா ராம் சிங் 3,80,581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்படியாக நாடு முழுவதும் இடதுசாரிகள் 8 தொகுதிகளில் வென்றிருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சிபிஎம் 3, சிபிஐ 2 என மொத்தம் நாடு முழுவதும் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2014ல் சிபிஎம் 9, சிபிஐ 1 என 10 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. 2009 தேர்தலில் சிபிஎம் 16, சிபிஐ 4 என 20 தொகுதிகளை பெற்றிருந்தது.
என்னதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், அந்த கட்சியின் தீவிர செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications