ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ரூ.1823 கோடியை வரியாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் ரூ.1823 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதாவது, கடந்த 1993-1994 முதல் 2020ம் ஆண்டு வரை வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்த தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை, 'வரி பயங்கரவாதம்' என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், "பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. காங்கிரஸை நிதி ரீதியாக முற்றிலுமாக முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விமர்சித்துள்ளார்.
இவரை தொடர்ந்து பேசிய கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கான், "வரி விதிப்பு சட்டங்களை பாஜக கடுமையாக மீறுகிறது. சீதாராம் கேஸரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என பாஜக கூறியுள்ளது. வருமான வரித்துறை விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜக ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகுமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications