"ஷாக்.." இந்தியாவில் மீண்டும் கொரோனா மரணங்கள்.. ஒரே நாளில் 5 பேர் பலி.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப்போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து நாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மீண்டுவிடவில்லை. வேக்சின் தொடங்கி பல தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே கொரோனா கட்டுக்குள் வந்தது.

ஆனால், இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் திடீரென கொரோனா உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
உயிரிழப்பு: இதற்கிடையே இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 335 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல நமது நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1,701ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இதுவரை நமது நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்பது 4.50 கோடியாக (4,50,04,816) உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,44,69,799) அதிகரித்துள்ளது. நமது நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.81%ஆக உள்ளது நமது நாட்டில் கொரோனாவால் இதுவரை 5,33,316 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
என்ன காரணம்: கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு குறைந்ததற்கும் அதன் தீவிர தன்மை குறைந்ததற்கும் வேக்சின் தான் முக்கிய காரணம்.. நமது நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 வகை கொரோனா தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வகை கொரோனா கேரளாவில் 79 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காரகுளத்தில் அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஜேஎன் 1 கொரோனா உறுதியானது.
கேரள அமைச்சர்: அந்தப் பெண்ணுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகள் தெரிந்த நிலையில், அவருக்கு இந்த பாதிப்பு உறுதியானது. அவருக்கு லேசான பாதிப்பே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், "இப்போது கேரளாவில் கண்டறியப்பட்ட JN.1 கொரோனா குறித்து நாம் பயப்பட தேவையில்லை. இது கவலைக்குரிய கொரோனா வகை இல்லை.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியாவுக்கு வர இருந்த பயணிகளிடம் சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்த வகை பாதிப்பு உறுதியானது. இதனால் எந்த கவலையும் தேவையில்லை. இது ஒரு துணை வகை. அவ்வளவுதான்.. இப்போது இது கேரளாவில் உறுதியாகியுள்ளது. கேரள அரசு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாம் கவலையடைய தேவையில்லை" என்றார்.
அதேநேரம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக இணை பாதிப்பு இருப்போர் மாஸ்க் கூட அணியலாம் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications