2 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஷாக்.. 100-ஐ கடந்த சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை
டெல்லி: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடின. பொது முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள் ஆகியைவை அமல்படுத்தப்பட்டன. இதனால், பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் படி முக கவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் பல கோடி பேரை தாக்கிய கொரோனா தடு்ப்பூசி கண்டுபிடித்த பிறகு சற்று ஓயத்தொடங்கியது. இடையில் அவ்வப்போது உருமாறிய கொரோனா பரவினாலும் அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை.
ஒரே நாளில் 280 பேர்: அதன்பிறகு கொரோனாவையே மக்கள் கிட்டத்தட்ட மறக்கத் தொடங்கிவிட்டனர். சமூக இடைவெளி, சானிடைசர் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்து விட்ட நிலையில், மீண்டும் பயம் காட்ட தொடங்கியிருக்கிறது கொரோனா. இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதை தொடர்ந்து, கேரளாவில் கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்தபோது அது 'ஜே.என்.- 1' என்ற உறுமாறிய புதுவகை கொரோனா என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் 23 பேருக்கு பாதிப்பு: இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் திடீரென அதிகரித்து வருகிறது. ஓரிரு நபர்களுக்கு மட்டுமே பதிவாகி வந்த கொரோனா தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு: கொரோனா பாதிப்பில் இருந்து 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 100 எண்ணிக்கையை தாண்டியிருப்பது கொரோனாவின் தீவிரத்தை உணர்த்துவதாகவே இருக்கிறது.
ஏனெனில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ தாண்டுவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். தொற்று பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கியிருப்பதால் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடப்பது அவசியம் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications