இருவேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்தலாமா?.. சீரம் நிறுவனத்தின் தலைவர் விளக்கம்!
டெல்லி: இருவேறு தடுப்பூசிகள் கலந்து போடுவது ஆபத்தான முடிவாகும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா கூறியுள்ளார். ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது மற்றதை கலந்து ஏன் சிக்கலை ஏற்படுத்த வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசிகள்தான். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. இந்தியாவில் முதலில் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் இப்போது ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி பணிகள்
நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் மாதாந்திர இலக்கை பூர்த்தி செய்ய முடியவில்லை. குழந்தைகளை மூன்றாவது அலை எளிதாக தாக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகள் எப்போது தொடங்கும்? என்று அனைவரும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். ஏனெனில் பல்வேறு உலக நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

கலந்து போட வேண்டும்
தடுப்பூசிகள் தொடர்பான புதுப்புது தகவல்கள் தினம், தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சில நாடுகளில் வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் 2 ஊசிகளை கலந்து ஒன்றாகவே போட்டுக்கொண்டால் நல்ல பயன் தருகிறது என்றும் பல நாடுகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாயின.

மிகவும் ஆபத்தாகும்
2 வேறு வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்வதும், அதற்கு சிபாரிசு செய்வதும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். இதற்கு உரிய தரவுகள், ஆய்வுகள் செய்தபிறகே, 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும். எந்த வித ஆய்வுகளும் இன்றி 2 தடுப்பூசிகள் கலந்து போடலாம் என்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பும், சுகாதார நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தேவையில்லை
இந்த நிலையில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலக்க தேவையில்லை என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டன, அதனால்தான் நான் மூன்றாவது டோஸை எடுத்துள்ளேன். ஏழு முதல் எட்டாயிரம் எஸ்ஐஐ ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸை வழங்கியுள்ளோம். இரண்டாவது டோஸை முடித்தவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு பூஸ்டர் டோஸ்(மூன்றாவது டோஸ்) எடுத்துக் கொள்ளலாம்.

சிக்கல் ஏன்?
ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது மற்றதை கலந்து ஏன் சிக்கலை ஏற்படுத்த வேண்டும்? இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலப்பதற்கு நான் எதிரானவன். இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலக்க வேண்டிய அவசியமில்லை. கொரோனாவை தடுப்பதற்கு இருவேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவாகும். எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை அதிகப்படுத்துகிறோம். உலகில் எந்த நிறுவனமும் ஒரு மாதத்தில் 10 முதல் 12 கோடி டோஸ் வழங்க முடியாது என்று சைரஸ் பூனாவல்லா கூறியுளளார்.












Click it and Unblock the Notifications