அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு குறி வைக்கும் தாவூத் இப்ராஹிம்.. என்ஏஐ விசாரணையில் ‛திடுக்’
டெல்லி: இந்தியாவில் டெல்லி, மும்பை உள்பட பல இடங்களில் அரசியல் தலைவர்கள், தொழில்அதிபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சதித்திட்டம் தீட்டி குழுவை ஏற்படுத்தி உள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இவருடன் தொடர்பில் உள்ளவர்களை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் பஞ்சாப்பில் தாவூத்தின் சட்ட விரோத செயல்களை அரங்கேற்றிய நிறுவனம் கண்டறியப்பட்டது. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபுபக்கர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை சோதனை
தாவூத் இப்ராஹிம் விஷயத்தில் தொடர்ந்து கைது, கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸர், மறைந்த சகோதரி ஹசீனா, கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்பின் இக்பால் காஸரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சகோதரர் கைது
ஏற்கனவே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2017 ல் கைது செய்யப்பட்டு தானே சிறையில் இருந்த அவரை கோர்ட்டு அனுமதி பெற்று அமலாக்கத்துறையினர் மீண்டும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதலுக்கு திட்டம்
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் டெல்லி, மும்பை உள்பட பல இடங்களில் பிரபல அரசியல் தலைவர்கள், தொழில்அதிபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சிறப்பு குழுவை ஏற்படுத்தி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

வன்முறை
மேலும் இந்த சதிக்கார குழுவினர் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கொண்டு தாக்குதல் நடத்தி, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக மும்பை, டெல்லியை இலக்காக நிர்ணயித்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இக்குழுவில் உள்ளவர்களுக்கு ஹவாலா முறையில் தாவூத் இப்ராஹிம் பணம் அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications