வெளிநாடு செல்லவே யோசிக்கும் இந்தியர்கள்.. திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல்! வெளியான அதிர்ச்சி டேட்டா
டெல்லி: கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது மாறி வரும் புவிசார் அரசியல் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஓரே ஆண்டில் சுமார் 15% வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வெளிநாடுகளுக்குச் சென்று கல்லூரி படிப்புகளை மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தது. வெளிநாட்டில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்.. வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் கல்லூரி படிப்பை மேற்கொள்ளப் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்தது.

வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள்
இதற்கிடையே உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை முந்தைய 2023 ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் 15 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார். இது தொடர்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் பகிரப்பட்டது. அதில் கடந்த 2022ஆம் ஆண்டில், மொத்தம் 7,50,365 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வந்தனர். அது 2023ஆம் ஆண்டில் 8,92,989 ஆக உயர்ந்தது. இருப்பினும், கடந்தாண்டு அது 7,59,064 ஆகக் குறைந்து. அதாவது படிப்பிற்கு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 1.33 லட்சம் வரை குறைந்துள்ளது.

கனடா
இதில் அதிகபட்சமாகக் கனடாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தான் கடுமையாகச் சரிந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் கனடா சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,33,532ஆக இருந்தது. ஆனால், இப்போது அது 1,37,608ஆக குறைந்துள்ளது. கனடா தனது விசா நடைமுறைகளைக் கடுமையாக்கியது ஆகியவே முக்கிய காரணமாகும். மேலும், அங்கு காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜ்ஜர்கொல்லப்பட்டபிறகு, இந்தியா கனடா இடையேயான உரசல்கள் அதிகரித்தது. இதுவும் இந்தியர்கள் அங்குச் செல்வது குறைய ஒரு காரணமாகும்.

அமெரிக்கா
அதேபோல அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகச் சரிந்துள்ளது. அங்குக் கடந்த 2023இல் 2,34,473 மாணவர்கள் இருந்த நிலையில், கடந்தாண்டு அது 2,04,058ஆகக் குறைந்துள்ளது. ஓராண்டில் சுமார் 11% மேல் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வருவார் என்பதாலேயே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. டிரம்ப் வந்தால் விசா கெடுபிடி இருக்கும் என அஞ்சி பல இந்தியர்கள், தங்கள் திட்டங்களை மாற்றியதாகத் தெரிகிறது.
டிரம்பின் நிதானமற்ற கொள்கை முடிவுகள் ஒரு காரணம் என்றால் ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு டாலரில் தான் கட்டணம் செலுத்த வேண்டும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவதால், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கல்லூரி கட்டணத்தை உயர்த்தவில்லை என்றாலும் ரூபாய் மதிப்பில் நாம் அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்கிறார் அல்பானியில் உள்ள பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளாரி.

லிஸ்டில் எதிர்பார்க்காத இரு நாடுகள்
அதேபோல இந்தியர்கள் அதிகம் சென்று படிக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்த ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 78,093ஆக இருந்த நிலையில், அது இப்போது 68,572ஆக குறைந்துள்ளது. மேலும், பிரிட்டன் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,36,921இல் இருந்து 28% சரிந்து 98,890ஆக உள்ளது.
இந்தியர்கள் விரும்பும் நாடுகள்
மறுபுறம் 4 நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நியூசிலாந்து ஆகியவை தான் அந்த நாடுகள். ரஷ்யாவுக்குக் கடந்த 2022இல் 19,784 மாணவர்கள் சென்று படித்த நிலையில், அது 2023இல் 23,503 ஆகவும் 2024இல் 31,444 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலும் 2022இல் 6,406இருந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2024இல் 8,536ஆக அதிகரித்துள்ளது.. இதேபோல், ஜெர்மனி (2022 -20,684, 2024 - 34,702, நியூசிலாந்து (2022- 1,605, 2024- 7,297) ஆகிய நாடுகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காரணங்கள் என்ன
கனடாவுக்கு புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். இருப்பினும், அவரும் ட்ரூடோ கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியா உடனான நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. மேலும், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் வருகையால் சொந்த நாட்டினர் அவதிக்குள்ளாவதாகவும் அங்குள்ள மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இதனால் தற்போதைய சூழலில் கனடாவில் நிலைமை மாறுவது கடினம். அங்கு அடுத்துத் தேர்தல் நடந்து புதிய கட்சி ஆட்சியை அமைக்கும் வரை இந்தியர்கள் அங்குச் செல்ல ஆர்வம் காட்டுவது குறைவாகவே இருக்கும்.
டிரம்ப் பிரதான காரணம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்குச் சென்று படிக்கவே பலரும் விரும்புவார்கள். ஏனென்றால் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே இருக்கிறது. அங்குப் படித்தால் எளிதாக டாப் நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரே ஆள் டிரம்ப். அவர் எப்போது எந்த உத்தரவைப் பிறப்பிப்பார் என்றே நமக்குத் தெரியாது. இதன் காரணமாகவே அமெரிக்கா செல்ல இந்தியர்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள்.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பாலிசி கடுமையாக்கப்பட்டதே காரணமாக இருக்கிறது. பிரிட்டன் நாட்டில் மாணவர் விசா ரூல்ஸ் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், படித்து முடித்துவிட்டு அங்கேயே வேலை பார்க்கவும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் உடன் விசாவுக்கான கட்டணத்தையும் கூட உயர்த்தியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதே காஸ்ட்லியான ஒரு விஷயமாக மாறியுள்ளது. அங்குச் செல்ல இந்திய மாணவர்கள் தயங்க இது ஒரு காரணமாக இருக்கிறது.
மறைந்திருக்கும் கடைசி காரணம்!
இவை அனைத்தையும் விட ரூபாய் மதிப்பு சரிவதும் முக்கியமான காரணமாக இருக்கிறது. ரூபாய் மதிப்பு என்பது பல காலமாகச் சரிந்து வந்தாலும் சமீப காலங்களில் அது வேகமாகக் குறைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தாலும் அது பெரியளவில் கை கொடுப்பதில்லை. ரூபாய் மதிப்பு சரிவே இந்திய மாணவர்களுக்குத் தனி சுமையாக மாறிப் போகிறது. இது பெரும் பணக்காரர்கள் வெளிநாடு செல்வதைத் தடுப்பதில்லை என்ற போதிலும் கல்விக் கடன் பெற்று வெளிநாடு செல்வோர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications